சென்னை அருகே பயங்கரம்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த 2 கானா பாடகர்கள்! வீடுபுகுந்து கொடூரமாக வெட்டிக்கொலை
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே இரு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கானா பாடல்கள் பாடி வந்த இரண்டு இளைஞர்களை, மர்ம கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவரின் வீட்டில்தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்கள் பரத் மற்றும் சீனு என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் கானா பாடல்கள் பாடி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு நடைபெற்ற பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பிய பரத் மற்றும் சீனு, நண்பரான லோகேஷ் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள், பரத் மற்றும் சீனு மீது அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த படப்பை/ மணிமங்கலம் போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த இரட்டை கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அமைதியான கிராமப்புற பகுதியில் நடந்த இந்த இரட்டை படுகொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications