தெரு தெருவாக.. அலைய விடப்படும் மக்கள்.. தீவிரம் அடைந்த SIR பணிகள்.. களத்தில் என்ன நடக்குது?
சென்னை: SIR எனப்படும் தீவிர வாக்காளர் சீரமைப்பு பணிகள் தமிழ்நாட்டில் கடந்த வாரம் முதல் நடந்து வருகின்றன. இந்த பணிகள் காரணமாக மக்கள் பலரும் தெரு தெருவாக அலையவிடப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
உதாரணமாக ஒரே வீட்டில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால் ஒருவருக்கு.. நீங்கள் இந்த வார்டு வாருங்கள்.. நீங்கள் இந்த வீட்டில் இருந்த போது வாக்காளர் அடையாள அட்டை எடுத்துள்ளீர்கள். அதனால் அங்கேதான் உங்கள் பூத் அதிகாரி வருவார். எனவே அங்கே சென்றால்தான் பார்ம் கிடைக்கும்.

அதேபோல் வீட்டில் இருக்கும் இன்னொருவரிடம் நீங்கள் அந்த அலுவலகம் செல்லுங்கள். அங்கேதான் உங்களுக்கு அட்டை விவரங்கள் உள்ளன என்று ஒரே வீட்டில் உள்ள பலருக்கு வேறு வேறு இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பலர் அலையவிடப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னைவாசிகள் சந்திக்கும் சிக்கல்
முக்கியமாக சென்னை வாசிகள் பொதுவாக பல வீடுகளுக்கு மாறுவார்கள். 2 வருடங்களுக்கு - 3 வருடங்களுக்கு ஒரு முறை கூட பலர் வீடு மாறி இருப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் பலர் வீடு மாறிய நிலையில் அவர்கள் வேறு வேறு பகுதிகளுக்கு சென்று SIR பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
சொந்த ஊரில் கார்டு எடுத்துவிட்டு.. சென்னைக்கு வந்தவர்களும் இந்த பணிகள் காரணமாக ஊருக்கு அவசரமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாடு SIR
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் இரண்டாம் கட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
முதல் கட்டப் பணிகள் பீகாரில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்டம் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் SIR
முதற்கட்டமாக, இந்த மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் 2002, 2003, 2004 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடப்படும். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.
அக்டோபர் 27, 2025 நிலவரப்படி ஒவ்வொரு வாக்காளருக்கும் தனிப்பட்ட எண்ணிடப்பட்ட படிவங்களை தேர்தல் பதிவு அலுவலர்கள் (EROs) மற்றும் உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் (AEROs) அச்சிடுவார்கள். இந்த படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (BLOs) அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்படும். படிவங்களில் தற்போதைய வாக்காளர் பட்டியலிலிருந்து தேவையான அனைத்து விவரங்களும் இருக்கும்.
அதன்பின்னர், BLO-க்கள் படிவங்களை தற்போதுள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கத் தொடங்குவார்கள். படிவங்களில் பெயருள்ள அனைவரும் தங்கள் பெயர் 2003 வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். பெயர் இருந்தால், கூடுதல் ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க தேவையில்லை.
பெயர்கள் பட்டியலில் இல்லாதவர்கள், ஆனால் அவர்களது பெற்றோரின் பெயர்கள் இருந்தால், அவர்களும் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. அடையாளச் சான்று மட்டும் போதுமானது. 2002/03/04 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சரிபார்ப்பதற்காகக் கிடைக்கும்.
வாக்காளர் பட்டியல் எப்போது வெளியாகும்?
இந்த படிவங்களை சோதனை செய்த பின் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படும். அதன் பின்னர், நீக்கப்படுவதற்கு எதிரான கோரிக்கைகளும், சேர்க்கப்படுவதற்கு எதிரான மூன்றாம் தரப்பு ஆட்சேபனைகளும் டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும். இந்தக் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த விசாரணைகள் டிசம்பர் 9 அன்று தொடங்கி, ஜனவரி 31, 2026 க்குள் முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications