என் ஓட்டை திரும்ப கொடுங்க.. தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை! சிறப்பு முகாம்களில் 11 லட்சம் விண்ணப்பம்!
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் காரணமாக சுமார் 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. இதற்கிடையே பெயர் தவறுதலாக நீக்கப்பட்டவர் மீண்டும் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்களை நடத்தியது. அந்த வகையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் மனு அளித்துள்ளார்கள். கடந்த ஜனவரி 4ஆம் தேதி வரை மொத்தமாக 11,71,700 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போல, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மீண்டும் தொடங்கியது. இதே நடவடிக்கை முன்பு பீகார் மாநிலத்திலும் நடைபெற்றது.

அங்கு 60 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ஜனநாயகத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இருந்தாலும், தேர்தல் ஆணையம் அந்த திட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆரம்பித்தது.
வாக்காளர் பட்டியல் திருத்தம்
இந்த பணியின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களுக்கு படிவங்களை வழங்கினர். அவர்கள் நிரப்பிய படிவங்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த வரைவு பட்டியல் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு தீவிர திருத்தம்
இதில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள், 2,77,60,332 பெண் வாக்காளர்கள், 7,191 மூன்றாம் பாலின வாக்காளர்கள், மேலும் 4,19,355 மாற்றுத்திறனாளிகள் வரைவு வாக்காளர் பட்டியலின படி வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில், 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இது மொத்த வாக்காளர்களில் சுமார் 15.18 சதவீதம் ஆகும்.
தேர்தல் ஆணையம்
நீக்கப்பட்டவர்களில் மட்டும் சுமார் 26.94 லட்சம் பேர் இறந்தவர்கள் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், பெயர் நீக்கப்பட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் இருவரும் சேர்த்து, கடந்த டிசம்பர் 19ஆம் தேதி முதல் பெயர் சேர்க்கவும், திருத்தத்திற்கும் மனு அளித்து வருகின்றனர். இதற்கான அவகாசம் ஜனவரி 18ஆம் தேதிவரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
படிவம் 6 விண்ணப்பம்
இந்த முகாம்களில், தங்களின் பெயர் தவறாக நீக்கப்பட்டதாக நினைக்கும் வாக்காளர்கள், படிவம் 6 மூலம் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பித்தனர். அதேபோல் பெயர் நீக்கத்திற்குப் படிவம் 7, திருத்தம் மற்றும் இடமாற்றத்திற்குப் படிவம் 8 ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஆதார் எண், பிறப்பு சான்றிதழ் அல்லது இருப்பிடச் சான்று போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
2026 சட்டமன்ற தேர்தல்
இந்நிலையில், ஜனவரி 4ஆம் தேதி வரை மொத்தம் 11,71,700 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் தற்போது சரிபார்ப்பு பணியில் உள்ளன. சரிபார்ப்பு முடிந்ததும், வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த இறுதி பட்டியலே வரவிருக்கும் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் என்பதால், இந்த பணியை தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications