சார் PET பிரியட்டில் பாடம் எடுக்கிறாங்க.. மாணவி புகாருக்கு அமைச்சர் உதயநிதி அசத்தல் பதில்! ஆரவாரம்
சென்னை: ‛‛சார் PET பிரியட்டில் வேற சப்ஜெக்ட் பாடம் நடத்துறாங்க'' என மாணவி ஒருவர் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் நேரில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்த நிலையில் உதயநிதி சொன்ன பதில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி புதிதாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார்.

அமைச்சரான உதயநிதி
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நேற்று ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த உதயநிதி, ‛‛என் மீதான விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன். அமைச்சரவையில் என் மீதான குறைகள், விமர்சனங்களை முன்வைத்தால் அதை சரிசெய்வேன். தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக மாற்றும் வகையில் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.

தேசிய விளையாட்டு போட்டி மாணவர்கள்
இந்நிலையில் தான் ஆந்திரா மாநிலம் குண்டூரில் வரும் 17 ம் தேதி முதல் 22ம் தேதி வரை மத்திய அரசின் ஏகலைவா உண்டு உறைவிட மாதிரி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 8 ஏகலைவா பள்ளியில் இருந்து 177 மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக சென்னை மேல்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.

அமைச்சராக முதல் நிகழ்ச்சி
இவர்கள் இன்று இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் செல்ல உள்ளனர். இந்நிலையில் தான் அமைச்சரான பிறகு முதல் பொது நிகழ்ச்சியாக மாணவ-மாணவிகளுடன் அமைச்சர் உதயநிதி கலந்துரையாடினார். இந்த வேளையில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என மாணவர்களை வாழ்த்து உற்சாகப்படுத்திய உதயநிதி, மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

‛பாக்சிங் ரிங்’ கேட்பு
இந்த வேளையில் மாணவர்கள் உதயநிதியிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், பாக்சிங் ரிங் வேண்டும் என்று கேட்டார். அதனை கேட்ட உதயநிதி ஸ்டாலின், ‛‛நிச்சயமாக செய்து கொடுக்கிறோம்'' என உறுதியளித்தார். மேலும் பாக்சிங் ரிங் உள்பட பாக்சிங்கிற்கு தேவையான உபகரணங்கள் உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டார்.

PET பிரியட் பிரச்சனை
அதன்பிறகு இன்னொரு மாணவி, ‛‛சார் எங்களுக்கான PET பிரியட்டில் விளையாட விட்டால் மட்டுமே நன்றாக இருக்கும். அதில் மற்ற சப்ஜெக்ட்கள் எடுக்கிறாங்க.. இதை தடுக்க வேண்டும்'' என சிரித்தபடி புகாராகவும், கோரிக்கையாகவும் வைத்தார். இதை கேட்டவுடன் அங்கிருந்த பிற மாணவ-மாணவிகள் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

உதயநிதி சொன்ன பதில்
இதை கேட்டு சிரித்த உதயநிதி, ‛‛சரிம்மா.. கண்டிப்பாக நிறைவேற்றுவோம்'' என்றார். மேலும் ‛‛விளையாட்டு துறை அமைச்சர் வந்திருக்கிறார் என்பதற்காக இப்போதையே அனைத்து கேள்விகளும் கேட்கிறீர்கள்?'' என வேடிக்கையைாக கூறிய உதயநிதி, ‛‛இதுபற்றி முதல்வர் வழியாக அரசு துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications