அடுத்த ஆண்டு முதல் வந்தே பாரத் ரயிலில் வரும் வேற லெவல் வசதி.. அதிகாரிகள் கொடுத்த மேஜர் அப்டேட்
சென்னை: நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் ஸ்லீப்பர் வசதி கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ரயில் பயணிகளை கவரும் விதமாக மேம்படுத்தபட்ட சொகுசு வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை இதுவரை நாடு முழுவதும் 23 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பல வழித்தடங்களில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரையும், சென்னையில் இருந்து கோவை வரையும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. சென்னை - நெல்லை இடையேயான வழித்தடத்திலும் விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது.
இதற்கான முழு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வந்தே பாரத் ரயில்களை பொருத்தவரை முழுவதும் ஏசி வசதி, விசாலமான இருக்கைகள், பயோ டாய்லட்டுகள், தானியங்கி கதவுகள், வைஃபை வசதி, அகன்ற ஜன்னல்கள் என பல்வேறு வசதிகள் உள்ளன. விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
தற்போது வந்தே பாரத் ரயிலில், இருக்கை வசதி மட்டுமே உள்ளது. இதனால், தொலை தூர பயணிகளுக்கு பல மணி நேர பயணத்தில் அமர்ந்தே பயணிப்பது சற்று சிரமமாக இருப்பதாக கூறுவதையும் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தான் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் ஸ்லீப்பர் வசதி கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிஎப் பொதுமேலாளர் மால்யா இது தொடர்பாக கூறியதாவது: ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கின்படி கடந்த ஆண்டில் 2,261 எ.எல்.பி வகை பெட்டிகள் உள்பட 2,702 ரயில் பெட்டிகளை பெரம்பூர் ஐசிஎப் தயாரித்துள்ளது. இந்த ஆண்டில் 3,241 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது. இவற்றில் 30 வந்தே பாரத் ரயில்களும் அடங்கும். வந்தே பாரத் ரயிலை போன்ற வசதிகளுடன் ஏசி வசதி இல்லாத சாதாரண கட்டண ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில்களில் இருபக்கமும் என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும். இதனால் வேகமாக இயக்க முடியும். நீண்ட துர பயணத்திற்காக வந்தே பாரத் ரயிலில், ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தயாரித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம். அதேபோல், கதி சக்தி சரக்க்கு ரயில்களையும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், எளிதில் அழுகக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல முடியும்.












Click it and Unblock the Notifications