வெள்ளத்தில் நீந்தி வரும் பாம்புகள்.. வீடுகளில் குடியேறும் நத்தைகள்.. கூடுவாஞ்சேரி மக்கள் அவதி
செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி மகாலட்சுமிநகர் பகுதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. அங்கு 3 நாட்களாக மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ள நீர் வடியாத நிலையில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் மிதந்து வருவதாகவும் வீடுகளுக்கு நத்தைகள் குடியேறி வருவதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், உதயசூரியன் நகர், அமுதன் காலணி போன்ற பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளை மழைவெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தற்போது வரை ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலரும் சமூதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டிராக்டர் மற்றும் படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட குடிநீர், பால் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்த போதும் வெள்ள நீர் வடியாத நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுவாஞ்சேரி அருள்நகர், ஜெகதீஷ்நகர், செல்வராஜ்நகர், எம்.ஜி.நகர் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
தேங்கியுள்ள வெள்ள நீரில் இருந்து பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் ஊர்ந்து வீடுகளுக்குள் வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதே போல நத்தைகள் படையெடுத்து வந்து வீடுகளுக்குள் குடியேறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்கறிகள், அரிசி, உணவு பொருட்களை, பால், ரொட்டி போன்ற பொருட்களை தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
வீடுகளுக்கு புகுந்துள்ள நத்தைகளை வெளியேற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர். வெள்ளநீர் வடியாத நிலையில் மின்சாரமும் இன்றி கடந்த 4 நாட்களாக தவித்து வருவதாகவும் கூடுவாஞ்சேரி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications