2024ல் சூரிய சந்திர கிரகணங்கள்.. எங்கெல்லாம் தெரியும்?.. இந்தியாவில் பார்க்க முடியுமா?
சென்னை: சூரிய சந்திர கிரகணங்கள் வானத்தில் தோன்றும் அதிசய நிகழ்வுகள். ஜோதிட ரீதியாக கிரகணங்கள் குறித்து பல்வேறு புராண கதைகள் உள்ளன. 2024ஆம் ஆண்டு 2 சந்திர கிரகணமும் 2 சூரிய கிரகணமும் நிகழ உள்ளது. முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி ஏற்படும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. குறிப்பாக பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் நான்கு கிரகணங்கள் ஏற்பட உள்ளன. மார்ச் 25,2024 ஆம் தேதியன்று பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. வடக்கு, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக், அண்டார்ட்டிகாவில் தெரியும்.
ஏப்ரல் 8ஆம் தேதி, சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழும் சூரிய கிரகணம் என்பதால் இங்கு தெரியாது.மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக், பகுதிகளில் சூரிய கிரகணம் தெரியும்.
செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி புதன்கிழமை சந்திர கிரகணம் தெரியும். இந்திய நேரப்படி பகல் 07.45 மணிக்கு கிரகணம் நிகழ உள்ளதால் இந்தியாவில் தெரியாது. மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக், பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியும்.
அக்டோபர் 2,2024 சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது இந்தியாவில் தெரியாது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்ட்டிக், பகுதிகளில் சூரிய கிரகணம் தெரியும்.
இந்த கிரகணங்கள் குறித்து மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் உள்ள ஜிவாஜி ஆய்வகத்தின் மூத்த அதிகாரி டாக்டர் ராஜேந்திரபிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபிரகாஷ் குப்தா, கடந்த 2023 ஆம் ஆண்டில், 4 வானியல் நிகழ்வுகள் நடந்தன. இதில் முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம். வளைய சூரிய கிரகணம் மற்றும் பகுதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது.
நடப்பு ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி ஏற்படும். இந்த கிரகணம் இந்தியாவில் காண முடியாது. ஏனெனில் இந்த நிகழ்வு பகல் நேரத்தில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் நிகழ உள்ளதால், இந்த கிரகணத்தையும் யாராலும் பார்க்க இயலாது. செப்டம்பர் 18ஆம் தேதி காலை பகுதி சந்திர கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இந்த கிரகணத்தை பார்க்க முடியாது.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் நிகழவுள்ள கங்கண வளைய சூரிய கிரகணம் பார்ப்பவர்களின் கண்களுக்கு தென்படாது. இந்த வளைய சூரிய கிரகணம் 7 நிமிடங்கள் மற்றும் 21 விநாடிகள் நீடிக்கும் மற்றும் அதன் உச்சத்தில், சூரியனின் 93 சதவீதம் மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாக பூமியில் இருந்து ஒரு பளபளப்பான வளையம் போல் தோன்றும் என்று மூத்த அதிகாரி டாக்டர் ராஜேந்திரபிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications