எதுக்கும் துண்டை போட்டு வைப்போம்! எம்பி கனவில் எடப்பாடியை சுற்றும் மாஜிக்கள்! களைகட்டும் அதிமுக!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே எரிமலையாய் வெடித்துக் கிளம்பி இருக்கும் நிலையில், தற்போது இருந்து சில மாஜிக்கள் எம்பி பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமியை சுற்றி சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் வரை அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் இழுத்துக் கொண்டே செல்லும் என தெரிகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் இதற்கு ஒரு முடிவு கிடைக்காது என்கின்றனர் மூத்த அரசியல் நிபுணர்கள்.
காரணம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் அரசியல் கட்சிகளை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால் ஓபிஎஸ் தரப்பு தெம்பில் இருக்கிறது.

அதிமுக மோதல்
இது ஒருபுறம் இருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீவிரமான அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறார் ஓபிஎஸ். தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்வது அவர்கள் மூலமாக ஒன்றிய நகர அளவிலான நிர்வாகிகளை நியமனம் செய்வது என தீவிரம் காட்டி வருகிறார். அவர்களை வைத்து விரைவில் போட்டி பொதுக்குழு நடத்தவும் கட்சியின் பொதுச் செயலாளராக தானே தேர்ந்தெடுக்கப்பட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர் தேனி தரப்பினர். ஓபிஎஸ்க்கு என்று புதிதாக ஆதரவு வட்டம் பெருக்காவிட்டாலும் ஏற்கனவே கட்சியில் இருந்தவர்கள் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டவர்கள் என ஒரு அணி ஓபிஎஸ்க்கு இருக்கிறது.

மாறி மாறி சதுரங்கம்
இடையில் பாஜக தலைமை வேறு ஆதரவு - ஆதரவு இல்லை என மாறி மாறி சதுரங்கம் ஆடி வருவதால் ஓபிஎஸ் நிலைமை பரிதாபகரமாக இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடியால் தான் கட்சியில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் தற்போது பாஜக தலைமையும் மாறி மாறி ஆட்டம் காட்டி வருவது அவரை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு புது சிக்கல் ஒன்று உருவாகி இருக்கிறது என்கின்றனர் சேலம் தரப்பு நிர்வாகிகள். அதாவது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ் இல்லாமல் தனது தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்து பத்து முதல் 15 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றால் கட்சியில் தலைவராக தன்னை பொதுமக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் என்பதால் அதனை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

புதிய கூட்டணி
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட தகுந்த வெற்றியைப் பெற வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. இதனால் பாஜக தலைமையை கூட கைவிட்டு விட்டு காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பிற கட்சிகளோடு கூட்டணி அமைத்து புதிய தெம்போடு களம் காண காய்களை நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் தான் ஏற்கனவே தேர்தலில் தோற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் எம்பிக்கள் முன்னாள் அமைச்சர்கள் தற்போது எடப்பாடி வட்டமிட்டு வருகின்றனர். கட்சியில் பெரிய பொறுப்பில் இருந்தாலும் எம்பி ஆகவும் எம்எல்ஏவாகவோ இல்லாததால் தங்கள் பகுதிகளில் தீவிர அரசியல் செய்ய முடியாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் சூனியமாக இருப்பதை உணர்ந்துள்ளனர்.

எம்பி கனவு
எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது தங்கள் பகுதிகளை சீட்டுகளை பெற்று வர வேண்டும் என தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி எங்கு சென்றாலும் இவர்களும் சென்று தாங்களும் கட்சியில் இருக்கிறோம் என காட்டிக்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மதுரை தேனி ராமநாதபுரம் சிவகங்கை திருச்சி விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த மூத்த முன்னாள் நிர்வாகிகளும் கட்சிக்கு புதிதாக வந்த சிலரும் எம்பி கனவில் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. கட்சிக்கு சம்பந்தமே இல்லாத மாவட்டங்களில் கூட எடப்பாடி ஒரு கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றால் அங்கு தவறாமல் ஆஜராகி விடுகின்றனர்.

தற்போதே நெருக்கடி
ஏற்கனவே போதிய செல்வாக்கு இல்லாததால்தான் எம்எல்ஏ தேர்தலில் தோற்றவர்கள் கூட தற்போது எம்பி கனவில் எடப்பாடி வட்டமிட்டு வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நிலையில் தற்போது சில நிர்வாகிகள் எடப்பாடி நெருக்குவது கட்சிக்குள்ளும் மோதல் போக்கை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக மாநில அளவில் போஸ்டிங் வைத்திருக்கும் சில நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்களை மதிக்காமல் நேரடியாக எடப்பாடி பழனிச்சாமி உடன் வலம் வருவது உள்ளூர் நிர்வாகிகளை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வகையில் திண்டுக்கல் தேனி மதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் எடப்பாடியுடன் மிகத் தீவிரமாக வலம் வரத் தொடங்கி இருப்பது அந்தந்த ஊர் மாவட்ட தலைமைகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.

காய் நகர்த்தல்கள்
மேலும் சில மாஜிக்கள் தங்கள் மகன்களுக்கும் எம்பி சீட்டு பெற்று விட வேண்டும் என தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே ஒருபுறம் ஓபிஎஸ் பாஜக என இரு பக்கமும் அடிவாங்கி வரும் எடப்பாடி தற்போது கட்சிக்குள் இருந்து எம்பி கனவில் மிதந்து வரும் நிர்வாகிகளால் மன உளைச்சலை அடைந்து விட்டாராம். மேலும் தற்போதைய சிலர் தங்களை அதிகாரப்பூர்வமற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் நேரடியாகவே கேட்டுவிட்டனர் என்கின்றனர் சேலம் தரப்பு நிர்வாகிகள். இப்படி எடுத்த எடுப்பிலேயே நிர்வாகிகள் சண்டை இட்டுக் கொள்வது எடப்பாடிக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்து இருக்கிறது. வரும் காலங்களில் இந்த மோதல் மேலும் அதிகரிக்கலாம் எனவும் சீட்டு கிடைக்கவில்லை என்றால் ஓபிஎஸ் தரப்புக்கு அல்லது திமுக தரப்புக்கு தாவி விடலாம் எனவும் மறைமுக மிரட்டல் விடுத்து வருகின்றனர்.சில நிர்வாகிகள் இதனால் அடுத்தடுத்த நாட்களில் அதிமுக பஞ்சாயத்து மேலும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications