தவெக மாநாட்டில் "குட்டி ஸ்டோரி" சொல்லப்போகும் விஜய்? அதே ஃபார்முலாவா? வெளியான சீக்ரெட்
சென்னை: விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. இன்று மாலை இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரைநிகழ்த்த உள்ளார். மாநாட்டில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், தனது வழக்கமான பாணியான குட்டி ஸ்டோரி சொல்லி அதிரடியாக பேசுவார் என்று சொல்லப்படுகிறது.
தமிழக திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், தற்போது கைவசம் இருக்கும் ஒரு படத்தை மட்டும் நடித்து விட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இதன்படி, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை இன்று நடத்த உள்ளார்.

அணிவகுக்கும் தொண்டர்கள்: விக்கிரவாண்டி வி சாலையில் மாலை 4 மணிக்கு விஜய் கட்சியின் மாநில மாநாடு தொடங்குகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலையில் இருந்தே மாநாட்டு திடலுக்கு சாரைசாரையாக தொண்டர்கள் படையெடுத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான வாகானங்கள் விக்கிரவாண்டியை நோக்கி அணிவகுத்து வருகின்றன.
விக்கிரவாண்டி சுற்று வட்டார பகுதிகளில் எங்கு பார்த்தாலும் தவெக தொண்டர்கள் கூட்டம் தான் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு மாநாட்டுக்கு வருகை தரும் கட்சியினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநாடு இன்று நடக்கும் நிலையில் நேற்று இரவே தவெக தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர். 85 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு திடலில், 5 நுழைவு வாயில்களும், வெளியே செல்வதற்கு 15 வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
புனித ஜார்ஜ் கோட்டை: மாநாட்டு மேடையின் இருபுறங்களிலும் பெரியார், காமராஜர், அம்பேத்கர் மற்றும் தமிழ் அன்னை, வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட்-அவுட்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மாநாட்டு திடலின் பிரதான நுழைவுவாயில், தமிழக அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை போன்று மஞ்சள் நிறத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நேரில் பார்வையிட்ட விஜய்: மாநாட்டில் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை விக்கிரவாண்டியில் அமைக்கப்பட்ட திடலை விஜய் நேரில் பார்வையிட்டார். ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டன என்பது குறித்து நேரில் பார்த்து சென்றார். இன்று மாலை மாநாட்டு திடலுக்கு வரும் விஜய், முதலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கட்சிக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
என்ன பேசுவார்: அதன் பிறகு மாநாட்டு மேடைக்கு செல்கிறார். மாநாட்டில் நிர்வாகிகள் உரையாற்றிய பிறகு விஜய் பேசத்தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது. தனது கட்சியின் கொள்கை, கட்சி பயணிக்க போகும் பாதை என அனைத்தையும் இன்றைய உரையில் விஜய் அறிவிப்பார் என்பதால், அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிபார்ப்பு கட்சியினர் மத்தியில் மட்டும் இன்றி அரசியல் வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது.
குட்டிக் கதை: விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவின் போது குட்டிக் கதைகளை சொல்லி தனது கருத்தை வெளிப்படுத்துவார். அதே பாணியில் இன்றும் விஜய் குட்டி ஸ்டோரிகளை சொல்லலாம் என்று சொல்லப்படுகிறது. மத்திய மாநில அரசுகளை தனது குட்டி ஸ்டோரி மூலமாக விமர்சிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் தவெகவினர் கூறி வருகிறார்கள். விஜயின் பேச்சு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன.












Click it and Unblock the Notifications