தென்மாநிலங்கள் அதிகாரம் பறிபோகும்.. தொகுதி மறுவரையறை தான் மிகப்பெரிய ஆபத்து.. சோனியா காந்தி
சென்னை: மகளிர் இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே முடிந்துபோன விஷயம், அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதன் பின்னணியில் ஒளித்துக்கொண்டு வரப்படும் இந்தத் 'தொகுதி மறுவரையறை'தான் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆங்கில நாளிதழான இந்துவில் கட்டுரை எழுதியுள்ளார். பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ஒரு 'முன் கதவு' என்றால், அதன் வழியாகத் தென் மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் 'தொகுதி மறுவரையறை'யைப் 'பின் கதவு' வழியாகக் கொண்டுவருகிறார்கள் என்பதே சோனியா காந்தியின் வாதமாக உள்ளது.
நாடாளுமன்றத்தில் மற்றும் மாநில சட்டமன்றங்களில், மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, 2023 செப்டம்பர் மாதத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு சட்டம் இயற்றியது. எனினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை முடிந்த பின் இது அமலுக்கு வரும் என்று அறிவித்தது.

தற்போதைய நிலவரப்படி, 2027ல் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, 2029 லோக்சபா தேர்தலுக்குள் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்கிற நிலை வரும் என பாஜக நினைக்கிறது
மகளிர் இட ஒதுக்கீடு
எனவே விரைந்து செயல்பட முடிவெடுத்த மத்திய அரசு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர இருக்கிறது.
லோக்சபா இடங்கள் அதிகரிப்பு
இதன்படி, லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை, 543ல் இருந்து, 816 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. அத்துடன் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர, வரும், 16 - 18 வரை நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. இந்த சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு வழங்கும்படி, லோக்சபா, ராஜ்யசபா கட்சித் தலைவர்களுக்கு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியிருந்தார்.
சோனியா காந்தி கட்டுரை
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆங்கில நாளிதழில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் மத்திய அரசு இந்த வாரமே நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை அவசரம் அவசரமாகக் கூட்டியிருக்கிறது. இதற்குக் காரணம் 'மகளிர் இட ஒதுக்கீடு' என்று அவர்கள் சொல்வது ஒரு பெரிய பொய்! உண்மையான காரணம் 'தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தான திட்டம்" என்று சோனியா காந்தி தனது கட்டுரையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். சோனியா காந்தி முன்வைத்துள்ள முக்கிய குற்றச்சாட்டுகளை பார்ப்போம்.
இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல்
"தொகுதி மறுவரையறை தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் கசிந்துள்ள தகவல்கள் மிகவும் அச்சமூட்டுகின்றன. இது இந்திய அரசியலமைப்பின் மீதே நடத்தப்படும் ஒரு தாக்குதல். 2023-லேயே சட்டம் வந்தும், அதை 2027 மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஏன் முடிச்சுப் போட்டார்கள்? இப்போது திடீரென தேர்தலுக்கு முன்னதாக 2011 கணக்கெடுப்புப்படி அமல்படுத்துவோம் என அந்தப் பக்கமே ஒரு அந்தர் பல்டி அடிப்பது ஏன்?"
பிரதமர் மோடி ஏன் 30 மாதங்கள் காத்திருந்தார்
"ராஜ்யசபாவில் மல்லிகார்ஜுன கார்கே அப்போதே சொன்னார், '2024 தேர்தலிலேயே இதை அமல்படுத்துங்கள்' என்று. அப்போது பிடிவாதம் பிடித்த பிரதமர், இப்போது தேர்தலுக்கு நடுவில் (தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத் தேர்தல் உச்சத்தில் இருக்கும்போது) இதை கொண்டுவர துடிப்பது ஏன்? எதிர்க்கட்சிகளைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளவும், அரசியல் ஆதாயம் தேடவும் பிரதமர் உண்மையை மறைக்கிறார்.
தென் மாநிலங்களுக்கு நியாயமானதாக இருக்காது
"தொகுதி மறுவரையறை என்பது வெறும் எண்களைக் கூட்டுவது மட்டுமல்ல. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை மிகச்சரியாக அமல் செய்த தென் மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்கள் இதற்குக் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? தொகுதிகள் அதிகரிக்கும்போது, இந்த மாநிலங்களின் அரசியல் செல்வாக்கு முற்றிலுமாகக் குறையும். இது அரசியல் ரீதியாக நியாயமானதாக இருக்காது.
மக்கள் தொகை கணக்கெடுப்பும், சாதி வாரிக் கணக்கெடுப்பும்
"2021-ல் நடக்க வேண்டிய கணக்கெடுப்பை 5 ஆண்டுகள் தாமதப்படுத்தியதால் 10 கோடி மக்கள் ரேஷன் உள்ளிட்ட உரிமைகளை இழந்துள்ளனர். இப்போது 'டிஜிட்டல் சென்சஸ்' எனப் பெருமை பேசுபவர்கள், நிதானமாக ஜூலை மாதம் நடக்கும் பருவக்கால கூட்டத்தொடரில் இதைப் பேசி முடிவெடுக்கலாமே? எதற்கு இந்தத் 'திடீர்' அவசரம்? சாதி வாரிக் கணக்கெடுப்பைத் தடம் புரளச் செய்வதே பிரதமரின் உண்மையான நோக்கம் ஆகும்
"என் வழி தனி வழி" - பிரதமர் மோடியின் போக்கு
"பிரதமர் மோடி எப்போதுமே எல்லாவற்றையும் தனது பிடிவாதமான போக்கிலேயே செய்ய நினைக்கிறார். எதிர்க்கட்சிகள் மூன்று முறை கடிதம் எழுதியும், ஏப்ரல் 29-க்கு மேல் (தேர்தல் முடிந்த பின்) கூட்டத்தொடரை வைக்க முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது."
சோனியா காந்தியின் இறுதி எச்சரிக்கை
"மகளிர் இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே முடிந்துபோன விஷயம், அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதன் பின்னணியில் ஒளித்துக்கொண்டு வரப்படும் இந்தத் 'தொகுதி மறுவரையறை'தான் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து." இவ்வாறு அந்த கட்டுரையில் சோனியா காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications