திமுக பற்ற வைத்த தீ.. பற்றி எரியும் South Tax Movement! மோடிக்கு பெரிய தலைவலியாக மாறிய தெற்கு!
சென்னை: மோடியின் பாஜக அரசுக்கு எதிராகத் தென் இந்தியாவே ஒன்று திரண்டுள்ளது.
தங்கள் மாநிலம் செலுத்தும் வரித் தொகையிலிருந்து மத்திய அரசு திரும்பப் பகிர்ந்தளிக்கும் வரித் தொகையானது மிகமிக குறைவாக உள்ளது. இதனால் மத்திய அரசு தென் இந்தியாவை முடக்கப்பார்க்கிறது என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளனர் 5 மாநில முதல்வர்கள்.

குறிப்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன், மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். 'டெல்லி சலோ' என்ற முழக்கத்தோடு தனது கட்சி எம்.பிகளை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தி இருக்கிறார். திமுக எம்.பிகளும் கருப்புச் சட்டை அணிந்து டெல்லியில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர்'மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்குச் சமம்' என்றும் கூறி இருக்கிறார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அவரது ட்விட்டர் பக்கத்தில் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது பேசிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இது ஒரு காலத்தில் மோடி பேசியவை என்றும் அன்று அவர் முதல்வர், இன்று அவர் பிரதமர் என்றும் விமர்சித்துள்ளார் கனிமொழி.
அந்த வீடியோவில் குஜராத் மாநில அரசு வரியாகக் கொடுக்கும் தொகையைவிடக் குறைந்த தொகையை மத்திய அரசு பகிர்ந்து அளிக்கிறது. குஜராத் மக்கள் என்ன மத்திய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டுமா? என்று மோடி ஆவேசமாகப் பேசி உள்ளார்.
இன்றைக்கு அதே கத்தியை மோடிக்கு எதிராகத் தென் இந்தியாவை ஆளும் முதல்வர்கள் South Tax Movement என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாதுரை, வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது' என்று சொன்னார். அந்த வாசகம் தமிழக அரசியலில் மிகப் புகழ் வாய்ந்ததாக இன்றும் ஒலித்துக் கொண்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரம் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, 'வடக்குத் தெற்கு என்று பிரிவினையை ஏற்படுத்தப்பார்க்கிறார்கள்' என்று விமர்சித்திருக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தல் நெருக்கும் காலத்தில் தென் இந்தியா ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அதற்கு மூல காரணமாக இருந்தவர் திமுக எம்.பி. வில்சன்.
அவர்தான் நாடாளுமன்றத்தில் மாநில நிதிப் பகிர்வு தொடர்பாக ஒரு விளக்கத்தைக் கேட்டிருந்தார். அதற்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்தான் இன்று பற்றி எரிந்துகொண்டுள்ளது.
ஆகவே சூத்திரதாரியான வில்சன் என்ன சொல்கிறார்?

திமுக எம்.பி. வில்சன், "நாடாளுமன்ற உறுப்பினராக இது தொடர்பாக ஒரு கேள்வியை நான் எழுப்பி இருந்தேன். அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க வேண்டும்.
நான் கேட்ட கேள்வி என்னவென்றால், 'கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலமும் நேர்முகமாக அல்லது மறைமுகமாக மத்திய அரசுக்கு வரியாகச் செலுத்தி உள்ளது?
அதேபோல் மத்திய அரசு கடந்த 5 வருடங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கு எவ்வளவு வரித் தொகையைப் பகிர்ந்து அளித்து இருக்கிறீர்கள்? அதற்கான விவரங்களையும் கொடுங்கள்' என்று கேட்டிருந்தேன்.

கூடவே என்ன விதிமுறைகளின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது என்பதையும் தெளிவுபடுத்துங்கள் என்றும் கூறியிருந்தேன்.
அதற்கான பதிலை, மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ளது. அந்தப் பதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்பதுதான் வேதனை.

அந்தப் பதிலில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால்,
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களும் சேர்த்துக் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக மத்திய அரசுக்கு வரியாக 22 லட்சத்து 26 ஆயிரத்து 983.39 கோடி ரூபாயைக் கொடுத்துள்ளன.
இவ்வளவு வரியைப் பெற்றுக் கொண்ட மத்திய அரசு திரும்ப எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்றால், 6 லட்சத்து 42 ஆயிரத்து 295.05 கோடி ரூபாயைக் கொடுத்துள்ளது.

அதாவது மாநில அரசுகள் அளித்த தொகையிலிருந்து நான்கில் ஒரு பங்கு தொகையைத் தான் மத்திய அரசு திரும்ப அளித்துள்ளது.
அதே பாஜக ஆளுகின்ற மாநிலங்களான மத்திய பிரதேஷ், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு வரியாக எவ்வளவு தொகையை அளித்துள்ளார்கள் என ஒப்பிட்டுப் பார்ப்போம்.
உத்தரப் பிரதேசம் கடந்த 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி ஆக, 3 லட்சத்து 41 ஆயிரத்து 817.60 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. இம்மாநிலத்திற்கு மத்திய அரசு திரும்ப அளித்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா? 6 லட்சத்து 91 ஆயிரத்து 375.12 கோடி ரூபாயை அளித்துள்ளது.

அதாவது மாநில அரசு வழங்கிய ஜிஎஸ்டி தொகையை அப்படியே இரண்டு மடங்கு அதிகமாகக் கொடுத்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு எனக்கு அளித்துள்ள புள்ளிவிவரங்களை வைத்து நானே ஒரு கணக்கைப் போட்டுப்பார்த்தேன். அதாவது மாநில அரசு 1 ரூபாய் கொடுத்தால், திரும்ப மத்திய அரசு எவ்வளவு தந்துள்ளது என்பதற்கான எளிய கணக்கு இது.
அப்படிப் பார்த்தால், கடந்த 5 வருடங்களில் தமிழ்நாடு 1 ரூபாய் வரியாகச் செலுத்தி உள்ளது என வைத்துக்கொண்டால், மத்திய அரசு திரும்ப வெறும் 26 பைசாவைத்தான் திரும்ப அளித்துள்ளது. அதே கர்நாடகா 1 ரூபாய் கொடுத்துள்ளது என்றால் அதற்கு 16 பைசாவைத்தான் மத்திய அரசு திரும்ப வழங்கி உள்ளது.
இப்படி கேரளாவுக்கு 62 பைசா வந்துள்ளது. தெலுங்கானாவுக்கு மத்திய அரசு 40 பைசா வந்துள்ளது. ஆந்திராவுக்கு 50 பைசாதான் கிடைத்துள்ளது.

இதே பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசம் 1 ரூபாய் வரியாகச் செலுத்தியதற்கு மத்திய அரசு திரும்ப 1 ரூபாய் 70 பைசாவைத் திரும்பக் கொடுத்துள்ளது.
இதில் அதிபயங்கரமான விசயம் என்னவென்றால், உத்தரப் பிரதேசம் கடந்த 5 ஆண்டுகளில் 1 ரூபாயை வரியாக அளித்ததற்கு 2ரூ பாய் 2 பைசாவை மத்திய அரசு திரும்பக் கொடுத்துள்ளது. ராஜஸ்தான் 1 ரூபாய் அளித்ததற்கு 1 ரூபாய் 14 பைசாவை மத்திய அரசு திரும்பக் கொடுத்திருக்கிறது.

இவை நான் எளிமையாகப் போட்டுப் பார்த்த கணக்கின் விவரங்கள்.
குறிப்பாகத் தமிழ்நாடு பற்றி விரிவாகச் சொல்லிவிடுகிறேன். நமது மாநிலம் 6 லட்சத்து 674.49 கோடி ரூபாயை நாம் ஜிஎஸ்டி ஆகக் கட்டி இருக்கிறோம். வந்தது என்னவோ 1 லட்சத்து 58ஆயிரத்து 145.62 கோடி ரூபாய்தான் வந்துள்ளது. இதை வைத்துத்தான் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது என்று நாம் சொல்கிறோம்" என்கிறார்












Click it and Unblock the Notifications