இபிஎஸ், ஓபிஎஸ், வேலுமணி: 3 முக்கிய தலைகளுக்கு எதிராக காய் நகர்த்தும் திமுக: அடுத்தடுத்த நடவடிக்கை!
சென்னை: அதிமுகவின் மூன்று முக்கியமான தலைவர்களாக கருதப்படும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகிய மூன்று பேருக்கும் எதிராக திமுக தலைமையிலான தமிழ்நாடு வேகமாக காய் நகர்த்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் முக்கியமான தலைவர்களாக கருதப்பட்ட இவர்கள் மூவரும் தற்போது முக்கியமான சில புகார்களில் சிக்கி இருக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அதிமுகவிற்கு எதிரான வழக்குகளை விசாரிப்போம், அதிமுக தலைவர்களுக்கு எதிரான பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுப்போம்,பொள்ளாச்சி வழக்கு, டெண்டர் முறைகேடுகள், கோடநாடு கொலை வழக்கு உள்ளிட்ட அனைத்தையும் விசாரிப்போம் என்று வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்தது. திமுக தலைவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே அதிமுக தலைவர்கள் புரிந்த குற்றங்கள் குறித்து விசாரிப்போம் என்று மேடைக்கு மேடை குறிப்பிட்டு வந்தனர்.
இந்த நிலையில்தான் தற்போது வரிசையாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு எடுக்க தொடங்கி உள்ளது. இது தொடக்கம்தான் இன்னும் பல வழக்குகளில் வரும் நாட்களில் விசாரணைகள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாடு அரசு எடுத்த முக்கியமான நடவடிக்கைகள் குறித்தும், விசாரணைகள் குறித்தும் தற்போது பார்க்கலாம்.

வேலுமணி
முதல் நடவடிக்கை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேட்டு விசாரணை. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் ரூ. 811 கோடிக்கு முறைகேடு செய்ததாக, மோசடி செய்ததாக திமுகவின் ஆர். எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்கில் விசாரணை தற்போது துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. முந்தைய அதிமுக அரசு வேலுமணியை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க நினைத்த நிலையில் தற்போதைய திமுக அரசு இவருக்கு எதிரான புகார்களை விசாரிக்க முகாந்திரம் இருப்பதாக கூறி வழக்கில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது. அதோடு இவருக்கு எதிராக புதிய ஆதாரங்களை திரட்டும் பணியிலும் திமுக அரசு இறங்கி உள்ளது.

ஆதாரங்கள்
எஸ். வேலுமணி அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட மொத்தம் 60 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. இதன் தொடர்ச்சியாக 17 பேர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. இதனால் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேட்டு புகாரில் மேலும் பல ஆதாரங்களை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலுமணிக்கு எதிராக இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை பாயலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
இதுபோக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. போலீசார் எடுத்த புதிய விசாரணையின் முடிவில் சயன் முக்கியமான சில விஷயங்களை வாக்குமூலத்தில் தெரிவித்ததாகவும், இது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

சதி
இந்த புதிய வாக்குமூலம் காரணமாகவே இந்த வழக்கில் தனக்கு எதிராக சதி செய்யப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக பேட்டி அளித்துள்ளார். நேற்று சட்டசபை நிகழ்வுகளை புறக்கணித்த அதிமுக இன்றும் அவை நிகழ்வுகளை புறக்கணித்துவிட்டது. அதோடு ஆளுநர் பன்வாரிலாலை இபிஎஸ், ஓபிஎஸ் இன்று சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வாக்குமூலத்தை பயன்படுத்தி, முடியும் தருவாயில் இருந்த வழக்கை தமிழ்நாடு அரசு தூசி தட்டி உள்ளதால் வரும் நாட்களில் இதில் பல புதிய திருப்பங்கள் ஏற்படலாம் என்கிறார்கள்.

ஓபிஎஸ்
இது போக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் புளியந்தோப்பு கட்டிடம் விவகாரத்தில் நடவடிக்கை பாய்வதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது. சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டிடம் குறித்து இன்றுதான் திமுக எம்எல்ஏ பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த கட்டிடம் மிக வேகமாக கட்டப்பட்டுள்ளது. கொஞ்சம் கூட தரமில்லை. தொட்டா சிணுங்கி போல தொட்டால் விழுந்துவிடும் வகையில் கட்டிடத்தை கட்டி உள்ளனர். இது மக்களுக்குத்தான் ஆபத்து.இதில் முறைகேடு நடந்தது தெளிவாக தெரிகிறது.

முறைகேடு
கடந்த ஆட்சியில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை விசாரிக்க வேண்டும். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கட்டிட ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்று திமுக எம்எல்ஏ பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் இந்த முறைகேடு தொடர்பான விசாரணையும் ஓ. பன்னீர்செல்வம் பக்கம் திரும்புமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

வேறு புகார்கள்
ஏற்கனவே திமுக அரசு பொள்ளாச்சி பாலியல் கொடுமை விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணையும் விரைவில் தீவிரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகவும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அதேபோல் முன்னாள் வளர்மதியின் உதவியாளர் வெற்றிவேல் வீட்டிலும், டெண்டர் முறைகேடு தொடர்பாக ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications