ஆதாரம் சிக்க சிக்க.. இடத்தை அதிகரிக்கும் விஜிலன்ஸ்.. 60 இடங்களில் வேலுமணிக்கு செக்.. கிடுக்கிப்பிடி
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 50 இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது மேலும் 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மொத்தமாக சோதனை நடக்கும் இடங்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் இன்று அதிகாலையில் இருந்து சோதனை நடந்து வருகிறது. காலை 6 மணிக்கு சோதனை தொடங்கியது. இந்த சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
எஸ்.பி வேலுமணி அவருக்கு நெருக்கமான அன்பரசன், கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

சோதனை
இந்த நிலையில் இதுவரை சோதனை செய்யப்பட்ட இடங்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. காலையில் சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடக்கின்றன. தற்போது சென்னையில் 17 இடங்களில் சோதனை நடக்கிறது. கோவையில் மொத்தம் 40 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோவையில்தான் எஸ்.பி வேலுமணிக்கு நண்பர்கள் பலரும், சொந்த இடங்கள் நிறையவும் இருந்ததால் அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனை
அதேபோல் தற்போது திண்டுக்கல்லில் ஒரு இடத்திலும், காஞ்சிபுரத்தில் இரண்டு இடத்தில் சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. ஆதாரம் சிக்க சிக்க சோதனை செய்யும் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்கு முன் 55 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

9 மணி நேரம்
காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 9 மணி நேரமாக தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை மற்றும் கோவையில் இவரின் வீடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள், இவரின் உறவினர் நண்பர்களின் வீடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள், அவரின் அலுவலகங்களில் கிடைத்த ஆவணங்கள் இதை வைத்து சோதனை செய்யும் இடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கை உயரும்
முக்கியமாக சென்னையில் ஒரு பிரபல சொகுசு அபார்ட்மெண்ட் ஒன்றை இவர் வாங்கியதாக சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கும் இது தொடர்பாக சோதனை நடத்த அதிகாரிகள் விரைந்துள்ளனராம். கிடைத்த ஆதாரங்களை வைத்து சோதனை செய்யும் இடங்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்கிறார்கள். சோதனை இன்னும் முடியவில்லை.

சோதனை சீக்ரெட்
டாப் சீக்ரெட்டாக இந்த சோதனையை திட்டமிட்டு முறையாக நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலை வர லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே இந்த சோதனை குறித்து பலருக்கும் தெரியாது. சில டாப் அதிகாரிகள் மட்டுமே இதை பற்றி அறிந்திருந்தனர். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய மிகப்பெரிய ரெய்டுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிமுகவினர் இடையே இந்த சோதனை கொஞ்சம் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கு
மொத்தமாக ஆதாரங்களை திரட்டியபின் மேலும் சில பிரிவுகளின் கீழ் எஸ்.பி வேலுமணி மீது வழக்குகள் பதியப்படலாம். அதேபோல் மேலும் சிலரும் இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்படலாம். எஸ். பி வேலுமணிக்கு எதிராக சென்னை ஹைகோர்ட் வழக்கில் இந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கபட வாய்ப்பு உள்ளதால் விரைவில் அந்த வழக்கிலும் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications