பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்?
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உருவாகியுள்ள அரசியல் சூழல், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகிள்ளது. குறிப்பாக, எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அவர், அண்ணாமலையுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடரப் போகிறார் என்ற தகவல் கொங்கு மண்டலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. பல தசாப்தங்களாக தமிழக அரசியலை ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, தவெக ஆட்சியை கைப்பற்றியது அரசியல் வரலாற்றில் திருப்பமாக அமைந்தது.

இந்தத் தேர்தலில் திமுக அதிர்ச்சித் தோல்விகளை சந்தித்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் அதிமுகவுக்கு நிலைமை இன்னும் மோசமாக அமைந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததோடு, கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களும் தலைமைக்கு சவாலாக மாறின.
எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக, தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து சில எம்.எல்.ஏக்களை ஒன்றிணைத்து செயல்பட்டதாக எஸ்.பி. வேலுமணி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் அந்த முயற்சி வெற்றியடையாத நிலையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் உருவானது. ஆனால் கட்சித் தொண்டர்களின் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக சரியாகவில்லை என கூறப்படுகிறது.
எஸ் பி வேலுமணி
சில நிகழ்வுகளில் அவருக்கு எதிராக வெளிப்படையாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டதும் அதற்கு சான்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு இரங்கல் நிகழ்வில், கட்சித் தொண்டர் ஒருவர் எஸ்.பி. வேலுமணியை நோக்கி துரோகி என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திய சம்பவம் அதிமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, கட்சிக்குள் தொடர்ந்து செயல்படுவது அரசியல் ரீதியாக சரியான முடிவா என்ற கேள்வியை வேலுமணி தன்னிடமே எழுப்பி வருவதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை
இதேநேரத்தில், பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாநிலம் முழுவதும் புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியிலும் அவர் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், அண்ணாமலை தரப்பில் இருந்து எஸ்.பி. வேலுமணிக்கு அழைப்பு சென்றிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கொங்கு மண்டலம்
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் வலுவான செல்வாக்கு கொண்ட தலைவர்களை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். ஆனால் இந்த தகவல்களுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. மேலும், வேலுமணி உடனடியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதிமுக
அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாவது,"தற்போதைக்கு அதிமுகவிலேயே இருந்து அரசியல் நிலைமையை கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உள்ளார், கட்சிக்குள் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்" என கூறுகின்றன. அதேநேரத்தில், எதிர்காலத்தில் அரசியல் சூழல் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கலாம் என்ற மனநிலையிலும் அவர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொங்கு அரசியல்
கொங்கு மண்டலத்தில் இன்னமும் கணிசமான ஆதரவை கொண்டிருக்கும் எஸ்.பி. வேலுமணி போன்ற தலைவர், எந்த அரசியல் முடிவை எடுத்தாலும் அது அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் சாதக பாதகமாகவே இருக்கும். எனினும், அண்ணாமலையுடன் இணைவது குறித்து எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்தோ அல்லது அண்ணாமலை தரப்பிலிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இது வெறும் யூகங்களாகக் கூட இருக்கலாம் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications