“பாஜக தான் விஜய்யை இயக்குகிறது.. டெல்லி பின்புலம் இருக்கும் தைரியத்தில் தான் இந்த அகந்தை”: அப்பாவு
சென்னை: தவெக தலைவர் விஜய்யை பாஜக தான் இயக்குகிறது என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். பாஜக பின்புலத்தில் இருக்கும் தைரியத்தால் விஜய்க்கு அகந்தை வந்திருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள் என அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அப்பாவு, "மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார் என்று நினைக்கிறார்கள். இந்த ஆட்சி தொடர்ந்து இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால், அதை மாற்ற முயற்சி செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களிடம் என்ன கொள்கை இருக்கிறது? யாருக்காக அவர்கள் வருகிறார்கள் என்று கேட்கிறேன்.

மத்திய அரசு சிலரைக் கட்சி ஆரம்பிக்கச் சொல்லி, அதன் மூலம் இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க முயல்கிறது என்று கூறுகிறார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். விஜய்யைக் குறிப்பிட்டு நான் இப்படி சொல்லவில்லை. ஆனால் நீங்கள் அப்படி கேட்கிறீர்கள். விஜய் கட்சி தொடங்கி செயல்பட்டு வருகிறார். நிறைய பேர் இருக்கிறார்கள், ஆனால் அதை நான் வெளிப்படையாக சொல்லக்கூடாது. உங்களுக்குத் தெரியவில்லை என்றால், தனியாக வந்து சொல்கிறேன்.
விஜய் சினிமாவில் பேசுவது போல, 'சிஎம் அங்கிள்', 'சிஎம் சார்' என்கிறார். அவருடைய பேச்சில் கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. அந்த அகந்தை இருக்கக்கூடாது. அது எந்த தைரியத்தில் வருகிறது என்று தெரியவில்லை. தவெகவின் பொதுச்செயலாளர் டெல்லிக்குச் சென்று அமித் ஷா சொன்னதற்குப் பிறகு கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். கட்சியை ஆரம்பிக்கச் சொன்னது உள்துறை அமைச்சர் அமித் ஷா என்றும், அவர்களின் வழிகாட்டுதலோடு கட்சி ஆரம்பிக்கப்பட்டதாகவும் பல பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன.
விஜய்க்கு ஒய் பாதுகாப்பு கேட்காமலே கொடுக்கப்பட்டதாகவும், தனி விமானம் கூட மத்திய அரசு மூலம் கொடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இது அவர்கள் சொன்னது, நான் அதைத்தான் மீண்டும் சொல்கிறேன். அந்த பின்புலத்தில் இருக்கும் தைரியத்தால் அவருக்கு அகந்தை வந்திருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். உதாரணமாக, நான் ஒரு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால், எனக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளை போலீஸ் விதிக்கிறது. ஆனால், பிரதமர் மோடிக்கோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கோ இப்படி கட்டுப்பாடுகள் விதித்துப் பாருங்கள் என்று விஜய் முதல்வரைக் கேட்கிறார்.
இதிலிருந்தே அவர்கள் தான் இவரை இயக்குகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், விஜய்க்கு அரசியல் அடிப்படை தெரியவில்லை என்று நினைக்கிறேன். பிரதமருக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் புரோட்டோகால் என்ன? உள்துறை அமைச்சரின் நெறிமுறைகள் என்ன? முதல்வருக்கான நெறிமுறைகள் என்ன? இவருடைய நெறிமுறைகள் என்ன?
பிரதமர், உள்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரைப் பற்றிப் பேசும்போது, கண்ணிய குறைவான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். 'மாண்புமிகு முதலமைச்சர்', 'மாண்புமிகு பிரதமர்', 'மாண்புமிகு உள்துறை அமைச்சர்' என்று தான் அழைக்க வேண்டும். சினிமாவில் பேசுவது போல டயலாக் பேசுவதை மக்கள் விரும்புவதில்லை. இப்படி சிறுபிள்ளைத்தனமாக ஏன் பேசுகிறார்கள்?" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய சபாநாயகர் அப்பாவு, "பாஜக ஆளும் மாநிலமான மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை ஏற்கப்படாத நிலையில், அந்த மாநிலத்துக்கு கல்வி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், தமிழக அரசுக்கு கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தமிழகம் வளர்ச்சி அடைந்திருப்பதால், அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications