தீவிரமாக நடக்கும் எஸ்ஐஆர்.. நாளை தமிழகம் வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்! கள ஆய்வு செய்ய திட்டம்!
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை குறி்து நாளை முதல் (நவம்பர் 24) முதல் தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR - Special Intensive Revision) நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமான திருத்தப் பணியைவிட இது மிகவும் தீவிரமானது என்பதால், தேர்தல் ஆணையம் வீடு வீடாக கணக்கெடுப்பு மேற்கொள்ளும் வகையில் திட்டமிட்டுள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாக சென்று 'எஸ்ஐஆர்' படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி வருகின்றனர்.

வாக்காளர் பட்டியல்
வாக்காளர்கள் தங்கள் குடும்ப விவரங்கள், முகவரி, ஆதார் இணைப்பு போன்ற தகவல்களை அந்த படிவத்தில் பூர்த்தி செய்து மீண்டும் BLO-களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கணக்கெடுப்பு படிவங்களை BLO-கள் சரிபார்த்து, அவர்களுக்கென வழங்கப்பட்ட மொபைல் செயலியில் அதை ஸ்கேன் செய்து பதிவேற்றினால்தான் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் அந்த வாக்காளரின் பெயர் சரியாக இடம்பெறும். வாக்காளர்கள், எஸ்ஐஆர் படிவத்தை நேரில் மட்டுமல்ல, ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.
எஸ்ஐஆர் படிவம்
தற்போது பொதுமக்களிடம் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டு வருகிறது. மேலும் பூர்த்தி செய்வதில் ஏதாவது குழப்பங்கள் சந்தேகம் இருந்தால் அவற்றின் நிறத்தில் நிவர்த்தி செய்வதற்காக வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நேற்றும் இன்றும் செய்யப்பட்டது. இதுவரை 90 சதவீதத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் அவை திரும்ப பெறப்பட்டு தற்போது ஆன்லைன் மூலம் அப்லோடு செய்யப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள்
இந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை குறித்து நவம்பர் 24ஆம் தேதியான நாளை முதல் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பாட்னா கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்.
கள ஆய்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த பி. பவன், துணை இயக்குநர் தேவன்ஷ் திவாரி ஆகியோர் நவம்பர் 24 முதல் 26 வரை சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கட்டம்-II குறித்த ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்வார்கள். அதைத் தொடர்ந்து, அவர்கள் கள அளவிலான ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
சிறப்பு தீவிர திருத்தம்
கூடுதலாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ண குமார் திவாரி, இச்சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மற்றும் அதன் டிஜிட்டல் முறை உள்ளீடு குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகை தருவார். இதேபோல், செயலர் மதுசூதன் குப்தா சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ஆய்வு செய்வார்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications