கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா!
சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கல்வராயன் மலை பகுதியில் அவரது தலைமையில் இன்று நடைபெற்ற முக்கிய ஆய்வு கூட்டத்தில் கூறியுள்ளார்.
போதை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் நோக்கம் என்றும் இந்த தனிப்படை மூலம் கள்ளச்சாராய தயாரிப்பு மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்கள் இரும்புக்கரம் கொண்டு முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

கல்வராயன் மலை
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான கல்வராயன் மலை, அடர்ந்த காடுகளைக் கொண்டது. இதனைப் பயன்படுத்தி, பல ஆண்டுகளாக இங்குச் சட்டவிரோத கள்ளச்சாராயக் காய்ச்சுதல் மற்றும் கடத்தல் தொழில்கள் மறைமுகமாக நடந்து வருகின்றன.
கடந்த காலங்களில், குறிப்பாக 2024-ல் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயத்தால் பலியாகினர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறப்பு தனிப்படை
தற்போதைய தவெக அரசு நேரடியாக கல்வராயன் மலையையே முதன்மை இலக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது. முதலமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தனிப்படை, நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் தீவிரக் கண்காணிப்பு மூலம் கள்ளச்சாராய உற்பத்தியை வேரறுக்கும் பணியில் ஈடுபடும்.
வெறும் போலீஸ் நடவடிக்கைகளால் மட்டுமே போதைக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்து, தவெக அரசு விளையாட்டு மூலம் போதை ஒழிப்பு என்ற புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "கல்வராயன் மலையில் கள்ளச்சாரயம் ஒழிக்கப்படும். கள்ளச்சாரயத்தை ஒழிக்க தனிப்படை அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மதுபோதை பழக்கம் அதிகரித்துள்ளது. கல்வராயன் மலையில் 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு பயிற்சி மைதானம், பயிற்சி மாணவர்களுக்கான விடுதி அமைக்கப்படும்.
போதைப் பழக்கத்திற்கு செல்வதை தடுக்க இளைஞர்கள் விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டினாலே போதை கலாச்சாரம் ஓரளவு ஒழிந்துவிடும். போதை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே முதல்வரின் நோக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications