ரெடியா? சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயில்.. கோடை விடுமுறைக்கு சொந்தஊர் செல்ல சூப்பர் வாய்ப்பு
சென்னை: கோடைக்கால விடுமுறையையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கி உள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் சென்னையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் சூழலில் அவர்கள் குடும்பத்துடன் சொந்தஊர் வந்து செல்வார்கள்.

மேலும் வரும் 19 ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் ஏராளமானவர்கள் சொந்த ஊர் வந்து ஓட்டளிக்க தயாராகி வருகின்றனர். இதனால் பஸ், ரயில்களில் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் காணப்படும். இந்நிலையில் தான் பொதுமக்களின் கோடை விடுமுறைக்கு பொதுமக்களின் கூட்ட நெரிசலை தடுக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி இருமார்க்கமாக திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி
திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06070) புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைய உள்ளது. இந்த திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகதிய தேதிகளில் இயங்க உள்ளது.
மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கழிமை மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06069) புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த ரயில் வரும் 12, 19, 26, 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மட்டும் இயங்க உள்ளது.
இந்த ரயில்கள் இருமார்க்கமாக திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துபேட்டை, திருத்துறைபூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 1 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் ரயில் இயங்க உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications