பொங்கலுக்கு சென்னை, பெங்களூரில் இருந்து சொந்த ஊர் போறீங்களா?.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு நீண்டநாள் விடுமுறை கிடைப்பதால் வெளியூர்களில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் கல்வி, வேலைக்காக தங்கியிருக்கும் பலரும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்குவார்கள்.

2025 புத்தாண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது. அதற்கடுத்த நாள் ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் நாள், அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி திருவள்ளுவர் நாள், ஜனவரி 16 ஆம் தேதி உழவர் தினம் கொண்டப்படுகிறது. ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழக அரசு சார்பில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் குஷியாகியுள்ளனர். குறிப்பாக, அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் விடுமுறை நாட்கள், தீபாவளி, பொங்கல், ஆயூத பூஜை போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். பொதுமக்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்லும் வகையில் பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி பெங்களூர் - தூத்துக்குடி, பெங்களூர் - சென்னை, எர்ணாகுளம் - சென்னைக்கு இரண்டு வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு - சென்னை செல்ல ஜனவரி 10 ஆம் தேதி சிறப்பு ரயில் (எண் 07319) பெங்களூரில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். அதே நாளில் சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 07320) இரவு 10.50 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.
அதேபோல, பெங்களூர் - தூத்துக்குடி செல்லும் மக்களின் வசதிக்காக ஜனவரி 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயில் (எண் 06569) பெங்களூரில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜனவரி 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடியைச் சென்றடையும். மறுமார்க்கமாக சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ஜனவரி 12 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மைசூரு வரை செல்லும்.
எர்ணாகுளம் - சென்னை செல்ல ஜனவரி 16 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06046) மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குச் சென்னை சென்றடையும்.
மறுமார்க்கமாக ஜனவரி 17 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06047) இரவு 11 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென்றடையும் என்று ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications