சேருக்கு கீழே காது..ராமதாஸ் வீட்டில் ’விக்ரம்’ பாணியில் ‘பக்’..ஒட்டு கேட்கும் மெஷினின் விலை இவ்வளவா?
சென்னை: தனது வீட்டில் யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்திருந்ததாகவும் தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் அதனை கண்டறிந்ததாக கூறியிருக்கிறார் பாமக நிறுவனரான ராமதாஸ். இந்த நிலையில் அந்த ஓட்டு கேட்கும் கருவியில் இன்டர்நேஷனல் சிம் கார்டு இருந்ததாகவும், அதன் விலை சுமார் நான்கரை லட்சம் என தகவல் வெளியாகியிருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் வலுத்து வருகிறது. தந்தை மகன் இடையேயான மோதல் தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்றிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கிய ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாசை கட்சியின் தலைவர் ஆக்கினார். அதற்கு முன்னதாகவே மத்திய அமைச்சராகவும் ஆக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒரு சில விவகாரங்களால் தந்தை மகன் இடையே மோதல் எழுந்தது. தொடர்ந்து அந்த பிளவு அதிகமான நிலையில் தற்போது மோதலாக வெடித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் மாநாட்டுக்கு முன்னதாக கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ்.

தொடர்ந்து மாநாட்டிலும் அதற்குப் பிறகு ஊடக சந்திப்புகளிலும் அன்புமணி ராமதாஸ் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். அதே நேரத்தில் ராமதாஸ் குறித்து இதுவரை அன்புமணி எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கியும் வருகிறார் ராமதாஸ். இதுவரை 150-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் அவர்கள் பதவியில் தொடர்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் தான் வழக்கம் போல் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்/ குறிப்பாக தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தனது இருக்கைக்கு அடியில் அந்த கருவி இருந்ததாக கூறியிருக்கிறார்.
உண்மையில் ராமதாஸ் வீட்டில் பேசும் விஷயங்கள் அனைத்தும் வெளியே கசிந்ததாகவும், வேலையாட்கள், பணியாளர்கள், ஓட்டுநர் உட்பட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முக்கிய நிர்வாகிகளுடன் பேசிய பேச்சு கூட கசிந்த நிலையில் யாரோ தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்து இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போதுதான் ராமதாஸின் இருக்கைக்கு அடியில் ஒரு ஒட்டு கேட்கும் கருவி இருந்திருக்கிறது. லண்டனில் இருந்து அந்த கருவி வரவழைக்கப்பட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்த ஒட்டு கேட்கும் கருவியின் தொழில்நுட்ப ரகசியங்கள் குறித்து சமூக வலைதளங்களில் சில ராமதாஸ் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் இருந்து அந்த கருவி வாங்கப்பட்டு இருக்கிறது. அதன் விலை நான்கு முதல் நான்கரை லட்சம் இருக்குமாம். ஒட்டு கேட்கும் கருவியை பொறுத்தவரை இரண்டு வகைகள் இருக்கிறது. ஒன்று சிம்கார்டு இல்லாமலும், மற்றொன்று சிம்கார்டுடன் செயல்படும். சிம்கார்டு இல்லாமல் செயல்படும் கருவி மூலம் 500 மீட்டர் சுற்றளவில் தகவல்களைக் கேட்க முடியும்.
ஆனால் ராமதாஸின் வீட்டிலிருந்து இன்டர்நேஷனல் சிம் பொருத்தப்பட்ட ஒரு ஒட்டு கேட்கும் கருவியாம். அதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் தகவல்களை கேட்க முடியும். அது மட்டும் அல்லாமல் ஆட்டோமேட்டிக் வகையைச் சேர்ந்த அதிநவீன இந்த கருவி சத்தமே இல்லாமல் இருந்தால் செயல்பாட்டில் இருக்காது. அதே நேரத்தில் பேச்சு சத்தம் கேட்டவுடன் தானியங்கியாக ஆன் ஆகி ரெக்கார்ட் செய்து அதனை வாய்ஸ் நோட்டாக குறிப்பிட்ட நம்பருக்கு அனுப்புமாம்.
இதை அடுத்து எந்த நம்பருக்கு அந்த வாய்ஸ் நோட் சென்றது என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறதாம். இப்படியான தகவல் பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அன்புமணி ராமதாஸின் தீவிர ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ராமதாஸின் வீட்டில் அந்த ஓட்டு கேட்கும் கருவியை வைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறதாம்.












Click it and Unblock the Notifications