தமிழக மீனவர்கள் கைது விவகாரம்.. மோடியை சந்தித்த இலங்கை அதிபர்! உடனே முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை
சென்னை: ஆழ்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி, இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையே பிரதமர் மோடியும் இலங்கை அதிபரும் இன்று சந்தித்த நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயகா நேற்றைய தினம் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஹைதராபாத் இல்லத்தில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக மீனவர்கள் விவகாரம் தொடர்பாகவும் அதில் தீர்வு காண்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் ஆலோசித்து உள்ளனர்.
இலங்கை அதிபர்: இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக, "இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். நீடித்த மற்றும் நிலையான தீர்வு காண வேண்டும் என்பதை மோடி விரும்புகிறார்.
இரு நாடுகளுக்குமே மீனவர் பிரச்சினை தலைவலியாக மாறிவிட்டது. ஆழ்கடலில் சில பகுதிகளில் உள்ள மீன்களைப் பிடிக்க மீனவர்கள் குறிப்பிட்ட சில முறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், அது மீன் பிடி தொழிலுக்கே அழிவை ஏற்படுத்தலாம் என்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றார்.
பிரதமர் மோடி: அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடியும் கிட்டதட்ட அதே கருத்தையே வலியுறுத்தினார். மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் இந்த பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்பை விரும்புவதாகவும் குறிப்பிட்டார். மேலும், புதிய இலங்கை அரசு அங்குள்ள தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
முதல்வர் கோரிக்கை: இந்தச் சூழலில் தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மனிதாபிமான முறையிலும், அமைதியான முறையிலும் தீர்வு காண இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முடிவு செய்துள்ளது ஊக்கமளிப்பதாக இருக்கிறது. மோதலை தவிர்க்க வேண்டிய அவசியத்தை இது வலியுறுத்துவதாக இருக்கிறது.
விடுவிக்க வேண்டும்: இலங்கை கடற்படை கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளைத் திருப்பி அனுப்புவது குறித்தும் இலங்கை அதிபர் பரிசீலனை செய்ய வேண்டும். இது செயல் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும். நமது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகள் மற்றும் இணக்கமான எதிர்காலத்தை வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான முதல் படியாக இது இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகச் சொல்லி தமிழக மீனவர்கள் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications