கச்சத்தீவு அருகே மீண்டும் தமிழ்நாட்டு மீனவர்கள் 17 பேர் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம் ஓயாதா?
சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை மத்திய அரசு ஏன் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இலங்கை மீண்டும் அட்டூழியத்தில் இறங்கி உள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க உரிமை உள்ளது. கச்சத்தீவு என்பது தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பிரதேசம். கச்சத்தீவு தேவாலயயத்தில் ஓய்வெடுக்கவும் மீன்பிடி வலைகளை உலர்த்தவும் கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் பங்கேற்கவும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிமை இருக்கிறது. காலம் காலமாக தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவித்து வரும் இந்த உரிமையை இலங்கை கடற்படை பறித்து வருகிறது.

கடந்த வாரம் தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை செய்தது. தமிழ்நாட்டு தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வரும் தமிழ்நாடு மீனவர்கள் கைதை தடுக்கவும் இலங்கை கடற்படை கைது செய்த தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்புகிறார்.
இந்த நிலையில் இன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் 17 பேரை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்துள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராடும் நிலையில் மீண்டும் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக சென்னை உயர்நீதிமன்றமானது சில நாட்களுக்கு முன்னர்தான், கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை மத்திய அரசு ஏன் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுககும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மேலும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த பிரச்னை குறித்து தீர்வு காண மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பிஎஸ் ராமன், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் அனுப்பி இருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். மத்திய அரசுத் தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்டது
இதையடுத்து, மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது எனவும் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11-ந் தேதி ஒத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications