அடங்க மறுக்கும் இலங்கை! 14 தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்தது சிங்கள கடற்படை!
சென்னை: இலங்கை கடற்படையால் மேலும் 14 தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நடுக்கடலில் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து 14 பேரை கைது செய்தது. இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் கடலோர கிராமங்களில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து சிறைகளில் அடைத்து தண்டனை விதித்து வருகிறது. இலங்கை சிறையில் இருந்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் அனுப்பியும் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை.

தற்போதைய நிலையில் இலங்கை சிறைகளில் 141 தமிழ்நாட்டு மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 96 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 198 மீன்பிடிப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. ஆனாலும் மீனவர்களை விடுதலை செய்யவோ படகுகளை மீட்கவோ எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது மீனவர்களின் குமுறல்.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இலங்கை கடற்படை மீனவர்களை நடுக்கடலில் சுற்றி வளைத்தது. மேலும் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துவிட்டதாக கூறி மீனவர்களை கைது செய்தது. தமிழக மீனவர்கள் சென்ற 2 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இலங்கை கடற்படையின் அடங்காத இந்த அத்துமீறலுக்கு முடிவு எப்போதுதான் என்கிற கேள்வியுடன் கடலோர கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications