பள்ளிப் பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்... தயாராகுங்கள் மாணவர்களே - அன்பில் மகேஷ் உறுதி
ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஜனவரி 3ஆவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தொடர் விடுமுறை காரணமாக திட்டமிட்டபடி பாடத்திட்டத்தை முடிக்காமல் உள்ள காரணத்தினால் அரையாண்டுதேர்வு கூட இந்த முறை நடத்தப்படவில்லை. இதன் காரணமாக பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர்.

நேரடி வகுப்புகள்
ஜூன் மாதம் முதல் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே கணினி அல்லது மொபைல் மூலமாக ஆன்லைனில் பாடங்களை கற்று வந்தனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தேர்வுகள் நடைபெறுமா?
மாணவர்களின் கற்றல் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறை இன்றி வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் வகுப்புகள் இயங்கும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தில் நுழைந்துள்ள ஓமிக்ரான் தொற்று தீவிரமடையும் என்ற அச்சம் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. ஓமிக்ரான் அச்சுறுத்தல் தீவிரமாவதால் பள்ளிகள் வழக்கம் போல நடைபெறுமா? தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு
பள்ளி கட்டிடங்களின் தன்மை, பள்ளிகளில் பாலியல் புகார் உள்ளிட்டவை குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் பழைய கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழைய கட்டடங்கள் உள்ள 1600 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் பெட்டி வைக்கப்படும் . மேலும் 14417 என்ற புகார் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

மே மாதத்தில் தேர்வு உறுதி
தற்போது அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனால் நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும். ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் தேர்வு குறித்த அச்சத்தை போக்கும் வகையில் ஜனவரி 3வது வாரத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications