ஆளுநரே பொறுப்பு.. இந்த கறையை உங்களால் ஒருபோதும் கழுவ முடியாது.. காங்கிரஸ் எம்.பி தாக்கு!
ஆளுநருக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : மாண்புமிகு ஆளுநரே உங்கள் கைகளில் படிந்திருப்பது மரணத்தின் கறை, அதை ஒருபோதும் உங்களால் கழுவவே முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்தார்.
இந்நிலையில், தற்போது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022 அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு அரசு தரப்பில் உடனடியாக பதில் அளிக்கப்பட்டது.

24 மணி நேரத்திற்குள்
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான சட்ட மசோதா குறித்த நவம்பர் 24ம் தேதி விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் 24 மணி நேரத்திற்குள், அதாவது நவம்பர் 25ஆம் தேதி ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை மீண்டும் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

பரபரப்பு
ஆளுநர் மாளிகையிலிருந்து சபாநாயகர் அலுவலகத்திற்கு, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா தொடர்பாக 8 கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு ஆன்லைன் ரம்மி மசோதாவை மீண்டும் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநரே பொறுப்பு
இதுதொடர்பாக கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் 43 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஆளுநருக்கோ ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களின் நலன் தான் முக்கியம். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் ஆளுநரே பொறுப்பு. மாண்புமிகு ஆளுநரே உங்கள் கைகளில் படிந்திருப்பது மரணத்தின் கறை. அதை ஒருபோதும் உங்களால் கழுவவே முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications