ஸ்டாலினை மதிக்கிறேன்.. ஆனால் விஜய்க்கு AIADMK தேவையில்லை! கார்த்தி சிதம்பரம் அதிரடி
சென்னை: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்தாலும், இதனுடன் பின்னப்பட்ட அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ள கருத்துக்கள், இப்போது, தமிழக அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்ன சொன்னார் கார்த்தி சிதம்பரம்?
நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக விவகாரம் குறித்து கார்த்தி சிதம்பரம் சில முக்கியமான கருத்துக்களை நேற்றைய தினம் பகிர்ந்திருந்தார்.

கார்த்தி சிதம்பரம் கருத்து
"நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை, விஜய் ஆதரவு அணியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனு அளிப்பார்கள். இந்த விவகாரம் கோர்ட்டுக்கு செல்லும். அந்த அணி என்னவாக போகிறது என்று தெரியவில்லை. அதனால் இவர்களை ஆட்சிக்குள் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் இல்லாமலேயே ஆட்சி நடத்தும் வாய்ப்புகள் விஜய்க்கு இருக்கின்றன" என கருத்து கூறியிருந்தார்.
அதாவது தகுதி நீக்கம் தொடர்பான சட்டப் போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஆட்சி நிர்வாகத்தில் இவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு ஏற்படாது என்பதையே கார்த்தி சிதம்பரத்தின் இந்த பேச்சு உணர்த்துவதாக அமைந்திருந்தது.
விஜய்க்கு மக்கள் செல்வாக்கு
இந்நிலையில், இன்றைய தினம் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசியலில் தற்போது உருவாகி வரும் புதிய மாற்றங்கள் குறித்து தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது தனக்கு இன்னும் மிகுந்த மரியாதை இருப்பதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தனிப்பட்ட மரியாதையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், தவெக தலைவர் விஜய் குறித்தும் கார்த்தி சிதம்பரம் முக்கியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவருக்குக் கிடைத்து வரும் மக்கள் ஆதரவை ஆரம்பத்தில் தான் சரியாக கணிக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு அதிகமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த ஆதரவு தேர்தல் அரசியலிலும் தாக்கம் செலுத்தும் நிலை உருவாகி வருவதாகவும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் மீது மரியாதை
தொடர்ந்து பேசிய அவர், "இந்த தேர்தலில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு நற்பெயர் இருக்கிறது என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல் கொஞ்ச நாளைக்கு இந்த நற்பெயர் இருக்கும். விஜயின் செயல்பாட்டைப் பொறுத்து அந்த நற்பெயர் எப்படி வளரும் என்று பார்க்க வேண்டும்.
தவெக என்பது பிரதான அரசியல் கட்சியாக தமிழகத்தில் இருக்கும். அதேபோல், திமுகவும் பிரதான அரசியல் கட்சியாக. திமுகவை குறைத்து மதிப்பிட்டால் அது அரசியல் புரிதல் இல்லை என்றே அர்த்தம். அதிமுகவும் பாஜகவும் இந்த தேர்தவில் நிலையான ஆட்சி, மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதால் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வேண்டுகிறோம்.
திமுகவை குறைத்து மதிப்பிடக் கூடாது
திமுகவை குறைத்து மதிப்பிடக் கூடாது, திமுக ஒரு பெரிய அரசியல் சக்தி, அதன் அமைப்பு மற்றும் வாக்கு வங்கி நிலைத்தன்மை கொண்டது, அதே சமயம் அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளன. மதச்சார்பற்ற மற்றும் நிலையான ஆட்சி உருவாக வேண்டும் என்பதே தங்கள் நோக்கம், அதற்கான அரசியல் சூழலைப் பொருத்து கூட்டணி முடிவுகள் அமையும்,
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதால் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக திமுக இருக்கும்... திமுகவின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது என்ற கருத்து தவறு, அரசியலில் கூட்டணி மாற்றங்கள் சாதாரணமானவை, எனவே தற்போதைய அரசியல் சூழலை நிதானமாக மதிப்பிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.. கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ள இந்த கருத்துக்கள் திமுகவின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications