சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் -மாவட்டச் செயலாளர் தேர்தல்! அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
சென்னை: சுப்புலட்சுமி ஜெகதீசனின் அரசியல் விலகல் பற்றியும், நாளை மறுதினம் தொடங்கும் திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் தொடர்பாகவும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிகழ்ச்சியை முடித்த கையோடு நேராக கட்சி தலைமையகம் வந்த ஸ்டாலின், அங்கு துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோருடன் டிஸ்கஷன் நடத்தியிருக்கிறார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்திற்கு யாரை புதிதாக நியமிக்கலாம், மாவட்டச் செயலாளர் தேர்தலை எப்படி நடத்தலாம் என்பது குறித்து அதில் விரிவாக பேசப்பட்டிருக்கின்றன.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாக வெளியிட்ட அறிக்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து துரைமுருகனுடன் மட்டும் இது குறித்து பேசிவிட்டு ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டார்.

மாவட்டச் செயலாளர் தேர்தல்
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளிவிழாவில் உற்சாகமாக பேசிய முதல்வர் ஸ்டாலின், அந்த விழாவை முடித்த கையோடு நேராக தலைமைச் செயலகம் செல்லாமல் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் விரைந்தார். அங்கு சீனியர் நிர்வாகிகளுடன் சுப்புலட்சுமி ஜெகதீசன் பற்றி ஆலோசித்த அவர், நாளை மறுதினம் தொடங்கும் திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் பற்றியும் பேசியிருக்கிறார்.

திமுக பொதுக்குழு
மேலும், மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிந்தவுடன் திமுக பொதுக்குழுவை அக்டோபர் மாதம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாநிதி காலத்திலேயே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனை ஸ்டாலின் தான் முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் கட்சியில் ஆக்டிவாக இயங்க வைத்தார். இந்நிலையில் அரசியலில் இருந்தே விலகுவதாக ஒரு முடிவை எடுத்து தலைமைக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

விரைவில் அறிவிப்பு
சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்த திமுக துணை பொதுச்செயலாளர் பதவியிடத்துக்கு விரைவில் மகளிர் கோட்டாவில் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஒருவர் யாராக இருக்கும் என்பது தான் திமுக வட்டாரத்தில் பட்டிமன்றம் வைக்காத குறையாக விவாதப் பொருளாக திகழ்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications