மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ்க்கு நிதி இல்லை! தமிழ்நாட்டிற்கு பெரிய ஏமாற்றம்! ஸ்டாலின் அதிருப்தி!
மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தை தருகிறது என ஸ்டாலின் அதிருப்தி.
சென்னை: தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மத்திய பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இதேபோல் விளிம்பு நிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நம்பிக்கையும் அளிக்காத பட்ஜெட் என அவர் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மிகப் பெரிய ஏமாற்றம்
இன்று மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்துள்ள 2023-24-ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

வரவேற்கத்தக்க அம்சங்கள்
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் "தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம்", "இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு", "மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன்", "கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது" போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு) மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.

புதிய பேருந்துகள் வாங்க
ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது. மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது. மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.

கூடுதல் நிதிச்சுமை
நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை (Unit cost) உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு இத்திட்டத்தின்கீழ், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.

மிகப்பெரிய ஆபத்து
ஒன்றிய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக (pilot basis) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே, இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாயத்தோற்றம்
வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது ஒன்றிய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

வழக்கம்போல் ஏமாற்றம்
நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த ஒன்றிய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications