ஸ்டாலின் திடீரென பகிர்ந்த ஹேஷ்டேக்.. “இந்தி திணிப்பை நிறுத்து” -கோவா விமான நிலையத்தில் நடந்தது என்ன?
சென்னை: கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாத தமிழ் பெண் பயணியை அவமதித்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரின் செயலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் சென்னைக்கு செல்வதற்காக கோவா விமான நிலையத்திற்கு சென்று உள்ளார். அவரிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இந்தி தெரியுமா என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது என்று பதிலளித்து உள்ளார். இதனை மதிக்காத மத்தியப் படை வீரர், "தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. தேவைப்பட்டால் கூகுளில் தேடி பாருங்கள்.

இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும்." என்று காட்டமாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த அந்த பெண் பொறியாளரை அதட்டும் வகையில் பேசி உள்ளார். மத்திய பாதுகாப்புப் படை வீரரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையங்களில் இந்தி தெரியாத பயணிகள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.
கோவா விமான நிலையத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் பயணியிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண் பயணியிடம் அத்துமீறிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரின் செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டு இருப்பதாவது, "கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டு உள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும். #StopHindiImposition" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications