உரிமையா கேட்ட ஸ்டாலின்.. பார்த்ததுமே கலங்கிய திப்பம்பட்டி ஆறுச்சாமி.. ’முடிஞ்ச்’ பாஜக திட்டம் பனால்!
சென்னை : கட்சியில் மதிக்கவில்லை என்பதற்காக திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக திப்பம்பட்டி ஆறுச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில், இன்று அவரை வரவழைத்துப் பேசினார் ஸ்டாலின்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்ததுமே கலங்கி கண்ணீர் விட்ட திப்பம்பட்டி ஆறுச்சாமி, தனது மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்துள்ளார்.
அவருக்கு ஆறுதல் சொன்ன முக ஸ்டாலின், கட்சிக்காக உழைத்த நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதிருப்தி அடையலாமா எனக் கேட்டு, நம்பிக்கை கொடுத்துள்ளார்.
ஸ்டாலின் தந்த உறுதியால் மனம் நெகிழ்ந்துபோன திப்பம்பட்டி ஆறுச்சாமி, பொறுப்பில் இருந்து விலகவில்லை என்றும், கட்சிக்காக உழைப்பேன் என்றும் கூறிச் சென்றுள்ளார்.

அப்செட்டான திப்பம்பட்டி ஆறுச்சாமி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளராகவும், தலைமைக் கழக பேச்சாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தபோது, பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் ஆறுச்சாமியும் கலந்து கொண்டார். மாநில நிர்வாகியாக இருந்தும் அவருக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை.

ஆளுங்கட்சி பதவியில்
இதனால் கடுமையாக அதிருப்தி அடைந்த ஆறுச்சாமி, குடும்பச் சூழ்நிலை காரணமாக, திமுக ஆதிதிராவிட நலக்குழு மாநில துணைச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். நீண்டகாலமாக கட்சியில் பணியாற்றி வந்த மாநில நிர்வாகி, ஆளுங்கட்சி பதவியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்சிக்காக உழைத்தும் அவமரியாதை
குடும்பச் சூழ்நிலை காரணமாக விலகுவதாக ஆறுச்சாமி கடிதத்தில் தெரிவித்திருந்தாலும், உண்மையான காரணம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவே கதி என்று பணியாற்றியும், திமுக அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று சிறை சென்றும், கட்சியில் மதிக்கப்படவில்லை என ஆறுச்சாமி மனம் வெதும்பியதே காரணம் எனத் தகவல் வெளியானது.

உடனே அழைத்த ஸ்டாலின்
தலைமைக் கழக நிர்வாகிகள் சொன்ன தகவலைக் கேள்விப்பட்டு, உடனே ஆறுச்சாமியை தன்னைச் சந்திக்க வருமாறு அறிவுறுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்நிலையில், இன்று ஆறுச்சாமி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினைச் சந்தித்தார்.

கண்ணீர் விட்ட ஆறுச்சாமி
திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்ததுமே, கலங்கி கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஆறுச்சாமி. அவரது தோளில் தட்டி ஆறுதல் சொன்ன ஸ்டாலின், "என்ன வருத்தம்னாலும், கட்சியில தானே சொல்லியிருக்கணும். நாம ஆளுங்கட்சியா இருக்கும்போது இப்படி ஒரு முக்கியமான நிர்வாகி கட்சிப் பொறுப்பில் இருந்து போகலாமா?" எனக் கேட்டுள்ளார்.

நெகிழ்ந்துபோன ஆறுச்சாமி
திமுக தலைவர் ஸ்டாலினே தன்னிடம் இப்படிச் சொன்னதும் பதறிப்போன ஆறுச்சாமி, 'இல்லைங்க தலைவரே.. கட்சியை விட்டுப் போகமாட்டேன். கட்சிக்காக உழைக்கிறேன். சின்ன வருத்தத்தால் அவசரப்பட்டு முடிவெடுத்துட்டேன். நீங்க சொல்றதுதான் கட்டளை. தொண்டனாக திமுகவுக்காக கடைசி மூச்சு இருக்கும் வரை உழைப்பேன்." என நெகிழ்ந்து போய்க் கூறியுள்ளார்.

ஆதங்கம் தான்
மேலும், "பலமுறை எம்.பி, எம்.எல்.ஏ சீட் கேட்டும் கிடைக்கவில்லை. அதையெல்லாம் மறந்துவிட்டுத்தான் இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக இரவு பகல் பாராது உழைக்கிறேன். ஆனால், அன்று மேடையில் கூட எனக்கு சீட் கொடுக்காதது பெரிய வருத்தத்தை உண்டுபண்ணி விட்டது. கட்சிக்காக உழைக்கும் எனக்கு என் ஊரில் நடக்கும் கூட்ட மேடையில் நிற்கக் கூட இடமில்லை என்றால் கட்சிக்காரன் என்னை எப்படி மதிப்பான். அந்த ஆதங்கம் தான்" என மனம் விட்டுக் கூறியுள்ளார்.

விலகல் ஏற்கப்படவில்லை
இதைக்கேட்ட ஸ்டாலின், இனி இப்படி நடக்காது என அவரிடம் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த விலகல் கடிதத்தை நான் ஏற்கவில்லை எனக் கூறியுள்ளார் ஸ்டாலின். இதையடுத்து, திமுக ஆதிதிராவிட நலக்குழு மாநில துணைச் செயலாளர் பதவியில் நீடிக்கிறார் திப்பம்பட்டி ஆறுச்சாமி.

பாஜகவின் திட்டம் பனால்
திமுக மாநில நிர்வாகியான ஆறுச்சாமி, தலைமை மீதான அதிருப்தியில் இருப்பதால், அவரை தங்கள் பக்கம் இழுத்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு திமுகவில் இதுதான் மரியாதை எனக் கூறி இந்தப் பிரச்சனையை பெரிதாக்கலாம் என பாஜக கணக்குப் போட்டதாம். ஆனால், ஆரம்பத்திலேயே சுதாரித்து, நேரில் அழைத்துப் பேசி சிக்சர் அடித்துவிட்டார் தலைவர் என உற்சாகமாகக் கூறுகின்றனர் திமுக உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications