டோர் டு டூர்.. எதிர்க்கட்சியினரின் வீடுகளைக் கூட விடக்கூடாது.. 4 ஸ்டெப்.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்!
சென்னை: 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் தொடர்பாக கட்சியினருக்கு இன்று அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். இதில் உள்ள 4 ஸ்டெப்கள் பற்றி விளக்கமாக கூறியுள்ளார் ஸ்டாலின்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மிகப்பெரிய அளவில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை முன்னெடுத்துள்ளது திமுக.

இதுதொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் - தொகுதிப் பார்வையாளர்கள் - சார்பு அணிகளுக்கான செயலாளர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு தொடர்பாக விளக்கிப் பேசியுள்ளார் ஸ்டாலின்.
ஒவ்வொரு குடும்பத்திடமும் - ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.
இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் சேர்ப்போம்; அதற்காக ஜுலை 1 தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும்! களத்தில் செயல்படும் நாம் நான்கு படிநிலைகளில் செயல்பட வேண்டும்.
முதலாவது, பயிற்சி!
தி.மு.கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி மூலமாகத் தொகுதிக்கு ஒருவர் என 234 பேர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற 234 பேர்கள் மூலமாகத் தொகுதிவாரியாக 68,000 வாக்குச்சாவடிகளில் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்கும் அடுத்த இரண்டு நாட்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சிக்கான உதவிகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்து தர வேண்டும். பயிற்சியில் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், வாக்குச்சாவடி முகவர் ஆகியோர் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்!
இரண்டாவது, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடக்கம்!
ஓரணியில் தமிழ்நாடு தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
ஜூலை 1 - சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முறைப்படி நான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அறிவிப்பேன். அடுத்து 38 மாவட்டங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள்/மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்திட வேண்டும்.
ஜுலை 2 - 76 கழக மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதை இளைஞரணி உறுதி செய்திட வேண்டும்.
ஜூலை 3 - தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் எல்லாரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல வேண்டும். கழகச் செயல்வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரைச் செய்வதை உறுதி செய்திட வேண்டும்.
மூன்றாவது, வீட்டுக்கு வீடு பரப்புரை- 'டோர் டூ டோர்'!
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், BLC உறுப்பினர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்! இது கட்டாயம். இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. இவர்களுடன் கழகத்தின் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் இணைந்து கொள்ள வேண்டும்.
நான்காவதாக, நிறைவு!
ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்களை நடத்திட வேண்டும்.
மேற்சொன்ன நான்கு படிநிலைகளும் சரியாக நடைபெறுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டிய முழுப் பொறுப்பு மாவட்டச் செயலாளர்களுக்கும், மண்டலப் பொறுப்பாளர்களுக்கும், தொகுதி பார்வையாளர்களுக்கும் உரியது.
இந்தப் பரப்புரையில் முக்கியமான அம்சங்கள்
நம்பர் 1: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களையும் 100% சந்தித்திருக்க வேண்டும். எதிர்கட்சியினர் இல்லங்களுக்கும் நேரில் சென்று பேசிட வேண்டும்.
நம்பர் 2: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டும் இல்லை. இது தமிழ்நாட்டு மக்களை நம் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் ஒரு முன்னெடுப்பு.
நம்பர் 3: வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், BLC உறுப்பினர், கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கொண்ட குழுவாக சேர்ந்துதான் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தி உள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications