மகளிர் உரிமைத் திட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்! ஸ்டாலின் சொன்ன புள்ளிவிவரம்!
சென்னை: மகளிர் உரிமைத் திட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் புள்ளிவிவரக் கணக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது அவர் இதனை கூறினார். மேலும், மகளிர் உரிமைத் திட்டம் பற்றி அவர் பேசியதாவது;

''கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நாம் தொடங்கப் போகின்றோம். இன்னும் சொல்லப்போனால், இந்தத் திட்டத்தின் மூலமாக உதவித்தொகை கொடுக்கவில்லை; உரிமையை கொடுக்கின்றோம். அதுதான் முக்கியம்.
இந்த மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு கோடி பெண்கள் என்றால், ஒரு கோடிக் குடும்பங்கள். இன்னும் பல தலைமுறைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏழை, எளிய பெண்களுக்கு யாரையும் எதிர்பார்க்கத் தேவை இல்லாத பொருளாதார விடுதலையையும் இந்தத் திட்டம் நிச்சயமாக அளிக்கப் போகின்றது. இப்படி, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் உன்னதமான நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்த அரசுக்கு அனைவரும் வழக்கம் போல் நல்ல ஒத்துழைப்பை வழங்குங்கள்.
உங்களை எல்லாம் பார்க்கின்ற நேரத்தில் ஏதோ பணிகளை எல்லாம் நிறைவு செய்துவிட்டோம், முடித்துவிட்டோம் என்று சொல்லவில்லை, இன்னும் செய்யவேண்டும், இன்னும் செய்யப் போகிறோம், இன்னும் செய்வதற்கான அந்த ஆக்கமும், உற்சாகத்தையும் நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள், தொடர்ந்து அந்த உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்குங்கள்.''












Click it and Unblock the Notifications