தெற்காசியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கியவர் 'கலைஞர்'.. மார்தட்டி பெருமைப்பட்ட ஸ்டாலின்!
சென்னை: சட்டக் கல்விக்காக தெற்காசியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கியவர் கருணாநிதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சட்டமேதை அம்பேத்கர் பெயரில், சட்டப் பல்கலைக்கழகம் நிறுவிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான் என்ற வரலாற்று தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களின் விவரம் வருமாறு;

தெற்காசியா
1997-ஆம் ஆண்டு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களால், சட்டக் கல்விக்காக தெற்காசியாவிலேயே முதன்முதலாக ஒரு சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகம்தான், இந்த, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.

அம்பேத்கர் பெயரில்
இதனை அன்றைக்குத் தொடங்கிய முதலமைச்சர் கலைஞருடைய மகனான நான், முதலமைச்சராக இருக்கக்கூடிய காலக்கட்டத்தில், இந்தப் பல்கலைக்கழகத்தினுடைய வெள்ளிவிழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
இது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகம். சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில், சட்டப் பல்கலைக்கழகம் நிறுவிய முதல் மாநிலம், நம்முடைய தமிழ்நாடுதான்.

மராட்டிய மாநிலம்
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அண்ணல் அம்பேத்கரின் பெயரை மரத்வாடா, அதாவது மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு வைக்க தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கக்கூடிய மக்கள், அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட சிலர் அதை எதிர்த்தார்கள். எதிர்த்தது மட்டுமல்ல, வன்முறையில்கூட ஈடுபட்டார்கள். அம்பேத்கர் அவர்கள் பிறந்த மராட்டிய மாநிலத்திலே இந்த நிலைமை இருந்தது.

கோடிக்கணக்கில் தந்திகள்
தமிழ்நாட்டிலிருந்து தந்திகளை அனுப்ப வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள், அன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். கோடிக்கணக்கான தந்திகள் பறந்தன. அவருடைய கட்டளையை ஏற்று, அத்தனை பேரும் தந்தி அனுப்பி வைத்தார்கள். அந்த மாநில ஆளுநராக இருந்த அலெக்சாண்டர் அவர்களும், அப்பொழுது முதலமைச்சர் பொறுப்பில் இருந்த மதிப்பிற்குரிய சரத்பவார் அவர்களும் அந்தத் தந்திகளையெல்லாம் பார்த்ததற்குப் பிறகு, தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு பதில் அனுப்பினார்கள். என்ன பதில் என்றால், நீங்கள் நினைப்பதைப்போல நிச்சயமாக அம்பேத்கர் பெயரை நாங்கள் சூட்டுவோம் என்று அறிவித்தார்கள்.












Click it and Unblock the Notifications