உலகச் சந்தையில் Make in Tamil Nadu முக்கியப் பங்கு வகிக்கணும்! ஆசையை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: உலகச் சந்தையில் Make in Tamil Nadu முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தித்துறை மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது விருப்பத்தை பகிர்ந்துள்ளார்.
எந்தவொரு புதிய திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத் தான் அது அமைய வேண்டும் என தாம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.
இது தொடர்பாக அவர் அந்த மாநாட்டில் பேசிய விவரம் வருமாறு;

7வது முதலீட்டாளர் மாநாடு
ஆட்சிப் பொறுப்பேற்று, ஒராண்டு காலம் முடிவுற்ற நிலையில், இந்தத் துறையால் நடத்தப்படக்கூடிய ஏழாவது முதலீட்டாளர் மாநாடு இது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது. சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, துபாய் என்று பல இடங்களில் இந்த மாநாடு நடைபெற்றபோதிலும் இத்தனை மாநாடுகள், இவ்வளவு குறுகிய காலத்தில் வேறெந்த மாநிலத்திலும் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்றே நான் கருதுகிறேன்.

சிறப்பான ஆட்சி
தமிழ்நாட்டை ஏராளமான நிறுவனங்கள் நோக்கி வருவதும், வளர்வதும் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இது அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை எளிதாக்கும் மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி வந்திருக்கிறது.

1 டிரில்லியன் டாலர்
2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைவதற்கு, பெருமளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை (Capital intensive high-tech industries) ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலை வாய்ப்புகளை அளித்திடும் துறைகள் சார்ந்த தொழில் முதலீடுகளையும் (Employment intensive) ஈர்க்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி ஆளுநர்
சில நாட்களுக்கு முன்னால், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார். 'வளர்ச்சித் திட்டங்கள் என்பவை, வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வளர்ச்சித் திட்டங்களாக அமைய வேண்டும்' என்று சொல்லி இருந்தார். தமிழக அரசைப் பொறுத்தவரைக்கும், எந்தத் திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான் அது அமையும்; அமைய வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இதை மனதில் வைத்துதான் தமிழக அரசினுடைய அனைத்துத் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன.

உலகச் சந்தை
எந்த முதலீட்டுச் சூழ்நிலைக்கும் அரசு தயாராக உள்ளது, அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்து வருகிறது என்பது இதன் மூலம் நிச்சயமாக தெளிவாகும். இந்திய அளவில், காலணி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 26 விழுக்காடாகவும், ஏற்றுமதியில் 45 விழுக்காடாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள், உலகச் சந்தைகளில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தியாவிலேயே, அதிக அளவிளான காலணிகள், தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மையங்கள் அமைந்துள்ள மாநிலமாக நம் தமிழ்நாடு விளங்கி வருகிறது.

Zero Liquid Discharge
ஆம்பூர், இராணிப்பேட்டை, வாணியம்பாடி, வேலூர், பேரணாம்பட்டு, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் சென்னை ஆகியன தோல் மற்றும் தோல் பொருட்களுக்கு முக்கிய மையங்கள். இந்தியாவிலேயே, தோல் பதப்படுத்தும் தொழிலகங்களில் எல்லாம் Zero Liquid Discharge அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இந்தத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்காகத்தான் காலணி மற்றும் தோல் பொருட்களுக்கான கொள்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

2,00,000 நபர்களுக்கு
2025-ஆம் ஆண்டிற்குள், காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் 20,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பது மற்றும் 2,00,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.சிப்காட்/சிட்கோ மற்றும் பொது - தனியார் கூட்டாண்மை மூலம், 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில் கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு
அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிப்பது, அதிலும் பெண்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு அளிப்பது, குறிப்பாகப் பள்ளிக்கல்வி வரை பயின்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது போன்ற காரணிகளால், தமிழ்நாடு அரசு, இந்தத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. தோல் அல்லாத காலணிகள் துறை மீது கவனம் செலுத்திடவும் நமது அரசு முனைந்து வருகிறது.

SEZ நிறுவனம்
ஏற்கனவே, பல காலணி தயாரிப்பு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். பல நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமும் காட்டி வருகிறார்கள். இந்தக் கொள்கையினால் மேலும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவார்கள். 2009-ஆம் ஆண்டு செய்யார் SEZ நிறுவனத்தினுடைய தொழில் பிரிவுகளை நான் தொடக்கி வைத்தேன். இது இன்று மாபெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 2000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்கள். 35 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதில் 70 விழுக்காடு பேர் பெண்கள்.

Hong Fu நிறுவனம்
1000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 25 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் தைவான் நாட்டைச் சேர்ந்த Hong Fu நிறுவனம், தனது உற்பத்தித் திட்டத்தினை நிறுவிட தமிழ்நாட்டினைத் தேர்ந்தெடுத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற தோல் அல்லாத காலணி நிறுவனங்களான Nike, Adidas, Reebok, Puma போன்ற நிறுவனங்கள், நேரடியாகத் தமிழ்நாட்டில் உற்பத்தி நிறுவனங்களை நிறுவவில்லை. மாறாக, ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலமே உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறான பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்திட வேண்டுமானால், அதற்கான சூழலமைப்பை வலுப்படுத்திட வேண்டும்.

காலணி உற்பத்திப் பூங்கா
இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில், 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.தற்போது இத்துறைக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்திட வேண்டிய நிலை உள்ளது. இப்பூங்கா அமைக்கப்படுவதன் மூலம், காலணி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களையும் நாமே தயாரிக்க முடியும்.

Make in Tamil Nadu
உலகச் சந்தையில் Make in Tamil Nadu முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்ற நமது இலட்சியத்தை இத்திட்டம் நிறைவேற்றும். இன்று, 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37 ஆயிரத்து 450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இத்துறை சார்ந்த 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு இருக்கிறோம். இதேபோல் பல நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.












Click it and Unblock the Notifications