இந்த நாள்.. இந்திய அரசியல் சரித்திரத்தில் திமுக புரட்சியை நிகழ்த்திய நாள்.. ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை திமுக நிகழ்த்திக் காட்டிய நாள் இன்று எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியே மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்து வந்த நிலையில் முதல் முறையாக மாநிலக் கட்சியான திமுக 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் வென்று ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக அறிஞர் அண்ணா பதவியேற்றார்.

இந்தியப் பொதுத் தேர்தல் ஜனநாயக வரலாற்றில், முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த அரிய சாதனையைப் படைத்த நாள் இன்று. திமுகவின் சார்பில் 1967ஆம் ஆண்டு அண்ணா முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
கருணாநிதி உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். தமிழில் பதவியேற்பு நிகழ்வினை நடத்தி, உளமார உறுதிமொழி கூறிப் பொறுப்பேற்ற நாள் இன்று. சுமார் 23 மாதங்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அண்ணா 1969-ல் மறைந்த பிறகு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதல்வரானார்.
இதுதொடர்பாக, அறிஞர் அண்ணாவின் முதல் அமைச்சரவை புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,
"மார்ச் 6! இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!
பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!
அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #INDIA-வின் கூட்டாட்சித் தன்மையையும் பன்முகத் தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது. மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications