வரி வருவாய் கபளீகரம்! தமிழக அரசை செயல்படவிடாமல் முடக்குகிறார்கள்! மத்திய அரசு மீது ஸ்டாலின் புகார்!
சென்னை: தமிழகத்திற்கு உண்டான நிதி ஆதாரத்தை கொடுக்காமல் வரி வருவாயை கபளீகரம் செய்கிறார்கள் என மத்திய பாஜக அரசு மீது முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார். நிதி ஆதாரத்தை கொடுக்காததன் மூலம் மாநில அரசை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது மாநில அரசு தான் என்றும் மாநில அரசுகளை முடக்குவதற்காக கொண்டு வரப்பட்டது தான் ஜி.எஸ்.டி. என குற்றஞ்சாட்டினார்.
இந்த முழு நிகழ்வின் வீடியோவை இங்கே பார்க்கவும்

வரி வருவாயை வசூலிக்கிறார்களே அதனை மாநில அரசுகளுக்கு முறையாக பிரித்துக் கொடுக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் வேதனைத் தெரிவித்தார். அதேபோல் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறார்கள் என மத்திய அரசு மீது ஸ்டாலின் சரமாரி குற்றஞ்சாட்டினார்.
கல்வியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழும் நிலையில் அதனை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற முயற்சியாக புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறார்கள் என பேசியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எத்தனை வாக்குறுதிகள் கொடுத்தீர்கள், எதையாவது நிறைவேற்றினீர்களா என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பினார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என 2015ல் கூறிவிட்டு இப்போது தான் டெண்டரே விடுகிறார்கள் என ஸ்டாலின் சாடினார். பிரதமர் மோடி செய்த ஒரே சாதனை என்னவென்றால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பன்மடங்கு உயர்த்தியது மட்டுமே என கிண்டல் அடித்தார்.












Click it and Unblock the Notifications