குட்டி மோடி ஆசை.. சூடு போட்டுக்கொள்ளும் ஸ்டாலின்.. திருமாவளவனையும் விடாமல் வம்பிழுத்த அண்ணாமலை!
சென்னை : புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு குட்டி மோடியாக மாற ஆசைப்படுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
Recommended Video
திமுகவைப் பொறுத்தவரை குடும்பமே கட்சி, கட்சியே குடும்பம் என்ற நிலைதான் உள்ளது, இதை வைத்துக்கொண்டு ஸ்டாலின், பிரதமர் மோடியைப் போல வருவது சாத்தியமலை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சமூக நீதி பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ.கவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தைரியம் இருக்கிறதா என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுக்கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி
இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "மோடி பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை மோடி செயல்படுத்தி இருக்கிறார். கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் மேம்பட்டுள்ளது. எந்நேரமும் மக்கள் நலன் குறித்தே அவர் சிந்தித்து வருகிறார்.

8 ஆண்டுகளில்
கடந்த எட்டு ஆண்டுகளில் பா.ஜ.கவினர் போல, எந்த கட்சியினரும் கடின உழைப்பை வெளிப்படுத்தியது கிடையாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி என்பதே நமது இலக்கு. தமிழகத்தில் நிச்சயம் பாஜக ஆட்சி ஏற்படும். தமிழகத்தில் தாமரை மலரும். இந்த மண்ணில் என்றென்றும் பா.ஜ.க ஆட்சி தொடரும்.

பழங்குடியினத்தை சேர்ந்தவர்
ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டுள்ளார். இது, பா.ஜ.கவின் சிறப்பான சமூக நீதிக் கொள்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. பா.ஜ.க கொள்கைகளுடன் ஒத்துப்போகாத பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூட, திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், சமூக நீதி பற்றி பேசும் தலைவர்கள் அதை பின்பற்றுவதில்லை.

காய்ச்சல் வந்துவிட்டது
தமிழக மக்களை, தி.மு.க அரசு குழப்பி வருகிறது. ஜனாதிபதி வேட்பாளராக ஒரு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்மணி அறிவிக்கப்பட்ட உடன், முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. சமூக நீதி பற்றி பேசும் அவருக்கு பா.ஜ.கவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தைரியம் இருக்கிறதா? திருமாவளவன் போன்றவர்கள், கண்ணாடி முன் நின்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குட்டி மோடி
ஊழல் நாடாக இருந்த இந்தியாவை, பிரதமர் மோடி சாதனை நாடாக மாற்றிக் காட்டியுள்ளார். ஆனால், புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல தமிழக முதல்வர், குட்டி மோடியாக ஆசைப்படுகிறார். அதற்கு, பிரதமர் மோடியைப் போல அவர் உழைக்கவேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும். குடும்பத்துக்காக இல்லலாமல், மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும். ஆனால், திமுகவைப் பொறுத்தவரை குடும்பமே கட்சி , கட்சியே குடும்பம் என்ற நிலைதான் உள்ளது.

சாத்தியமே இல்லை
தமிழகத்தில் திமுக கட்சி எது, குடும்பம் என்றே தெரியவில்லை. இதை வைத்துக்கொண்டு பிரதமர் மோடியைப் போல வர முடியுமா? அது சாத்தியமே இல்லை. பிரதமர், 'ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் திட்டங்களை வகுத்து வந்தார். தமிழகத்தில், 'ஆபரேஷன் கஞ்சா' என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் 1000 கிலோ கஞ்சாவை எரித்து அழித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் சென்னை தான் கஞ்சா தலைநகரமாக இருக்கிறது என்று அரசே பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறது." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications