மீண்டும் சொல்லி அடித்த முதல்வர் ஸ்டாலின்.. பாராட்டுகள் கூறிய மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி
சென்னை: குடியரசு தின விழாவில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகளை சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும் மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வரும் நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவரும்.இந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியா 75 என்ற தலைப்பின் கீழ் குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற இருந்தது.
தாராபுரத்தில் சோகம்.. ஆற்றில் குளிக்க சென்ற 5 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாப சம்பவம்
இந்த நிகழ்வில் தமிழகம் சார்பில் பங்கேற்க அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசு தேர்வு குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசு மூன்று முறை திருத்தங்களை கூறியதற்கு பிறகு நான்காவது கூட்டத்தின்போது அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

முதல்வர் கடிதம்
இதற்கு தமிழகம் சார்பில் பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து பிரதமருக்கு தனது வருத்தத்தையும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார் இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் அனுப்பினார். இது தொடர்பாக பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் எந்தவித காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துவதாக கூறியிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் முதல்வர் கூறியிருந்தார். மேலும், மத்திய அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் இடம்பெறும் எனவும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என அறிக்கை மூலமாக தெரிவித்திருந்தார்.

சிபிஐஎம் பாராட்டு
இந்த நிலையில் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுகளை தெரிவித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அலங்கார ஊர்திகளில், சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று சுதேசி கப்பல் கம்பெனி நடத்தி தனது சொத்துகளை எல்லாம் இழந்து ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடியதால் இரட்டை தீவாந்திர தண்டனை பெற்ற வ.உ.சி, மகாகவி பாரதியார் மற்றும் பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்து போராடிய வீரத்தாய் வேலுநாச்சியார் போன்றவர்களுடைய உருவங்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதையும் ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஊர்திகளுக்கு வரவேற்பு
தமிழகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ள ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியதாகும் எனக் கூறியுள்ள பாலகிருஷ்ணன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கத் தவறிய ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் எனவும், இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக்கு மக்களின் பார்வைக்காக இந்த ஊர்திகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் சார்பில் வரவேற்பையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும், மாவட்டங்களில் இந்த அலங்கார ஊர்திகளுக்கு கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமெனவும் கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறோம் எனவும் கூறியுள்ளார்.