எடப்பாடி, ஓபிஎஸ் 2 தரப்பும் கொடுத்த லெட்டர்.. முடிவு என்ன தெரியுமா.. சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில்!
சென்னை: ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் அளிக்கப்பட்ட கடிதங்களை படித்து பார்த்து நியாயமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் அக்.17ல் தொடங்க உள்ளது. அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து வரும் நிலையில், ஓபிஎஸ் இருக்கை குறித்து என்ன முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவரான ஓ பன்னீா்செல்வமும் முன்வரிசையில் அருகருகே அமா்ந்திருப்பா். தற்போது இருவரும் பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், அதிமுகவின் சாா்பில் எதிா்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீா்செல்வம் அமா்ந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருக்கிறது.

ஓபிஎஸ் கடிதம்
இந்த நிலையில் சட்டபேரவைத் தலைவா் அப்பாவுக்கு, ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக நானே நீடிக்கிறேன். அதிமுகவின் நிா்வாகிகள் மாற்றம் தொடா்பாக ஏதாவது கடிதம் அளிக்கப்பட்டால், அதுதொடா்பாக எனது கருத்தைக் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அதிமுக பொதுச்செயலாளா் தோ்தலை நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அதிமுக பொதுக்குழு தொடா்பான வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. அதனால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் கடிதம்
இதனைத்தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில், அதிமுகவிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் நீக்கப்பட்டுவிட்டாா். அதனால், எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவியில் உள்ள அவருக்குப் பதில் ஆா்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று ஏற்கெனவே கடிதம் கொடுத்துள்ளோம். அதனால், அக்.17ல் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் ஆா்.பி.உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவு பேட்டி
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் களக்காட்டில் வேளாண்மை துறை சார்பில் ரூ. 6.25 கோடி மதிப்பீட்டில் வாழைத்தார் ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அப்பாவு கூறுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தப்படி முதல்வர் இங்கு வாழைத்தார் ஏல மையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் கட்டிட பணிகள் 1 ஆண்டுக்குள் முடிவடையும் என்று தெரிவித்தார்.

இன்னும் படிக்கவில்லை
பின்னர் அவரிடம் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, நான் இங்கு இருக்கிறேன். கடிதங்களை இன்னும் படிக்கவில்லை. இரு தரப்பிலும் 2 கடிதங்கள் கொடுத்துள்ளனர். அவைகள் எனது பரிசீலனையில் உள்ளது. நான் சென்னை சென்றதும், கடிதங்களை படித்து பார்த்து நியாயமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications