அழியும் இவ்வுலகில் அழியாத நேசங்களை விதைத்துச்செல்வோம்
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பற்றிய தன்னம்பிக்கை கதை, கொரோனா காலத்தில் மன உளைச்சலோ இருப்பவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்.
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், வீட்டில் சிகிச்சையிலும் இருப்பவர்களுக்கு நிறைய மன அழுத்தம் ஏற்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில்
எம்.எஸ்.சி., உளவியல் படிக்கும் மாணவி ஒருவர் இந்த கதையை எழுதியுள்ளார். வாசகர்களுக்காக இந்த கதையை பதிவு செய்துள்ளோம்.
வாழ்க்கையில் விட்டுக்கொடுக்காத அன்பும் விட்டுவிலகாத உறவும் கிடைக்கும் எந்த ஒரு மனிதரும் பாக்கியசாலிகளே...! பதவிமோகம், பணம்,புகழ், பிறரை ஏமாற்றிப் பெறப்படும் சொத்துக்கள்,களவு இவை யாவும் மாயையே. வாழ்க்கைக்கு தேவை பணமோ பொருளோ அல்ல. இவை அனைத்தும் தற்காலிகமே. அன்பு. இங்கு அதுதான் எல்லாம். உலகம் இரண்டு விஷயங்களை நோக்கி நம்மை நகரச் செய்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
எனக்குப் பிடித்து வாழ்ந்த கிராமத்து வாழ்க்கையிலிருந்து... வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நகரமயமாதல் வாழ்க்கையில் நானும் ஒருத்தியாக இணைந்துகொண்டேன்.

90களில் எனது திருமணம் முடிந்து என் கணவரின் உழைப்பால் வாங்கிய ஒரு பிளாட்டில் குடியேறினோம். சராசரி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தோம். காலம் அனைத்தையும் புரட்டிப்போட்டது.
2019 டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கப்பட்ட கொரோனாவின் கோர தாண்டவம் முடிவுக்கு வந்தபாடில்லை. பார்ப்பதற்கு அழகாக சுத்தமாக இருந்த அறைகள். மூன்று தனி படுக்கை அறைகள். தேவைக்கு அதிகமாகவே வசதிகள்.. என்ன இருந்தும் கிராமத்தில் இருக்கும் அன்பும்,அரவணைப்பும் சக மனிதர்களிடம் இங்கே கிடைப்பது அவ்வளவு எளிதானதல்ல.
ஜனார்த்தனன் செல்போனை எடுத்து ஷ்யாமளாவின் எண்ணைத் தொடர்பு கொண்டார். மறுமுனையில் இணைப்பு கிடைத்தது. ஹலோ.... ஷாம்...என்னங்க.... எப்படி இருக்கீங்க...?
நல்லா இருக்கேன் ஷாம்.. உன் வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு...? நல்லா போய்ட்டு இருக்குங்க. எல்லாம் ஒர்க் ஃபிரம் ஹோம் தானே.. சோ நோப்பிராப்ளம்.... உங்களுக்கு அங்க நிலமை எல்லாம் எப்படி இருக்கு..?
கொஞ்சம் மோசமாக தான் இருக்கு.. இன்னும் இரண்டு நாட்கள்ல இங்க கொஞ்சம் தளர்வுகள் வந்து போகும்னு நினைக்கிறேன். வாய்ப்பு கிடைச்சுதுன்னா உடனே கிளம்பி வந்துரலாம்னு இருக்கேன். இங்க எல்லா வேலைகளையும் என் பெர்சனல் அசிஸ்டண்ட் கிட்ட ஒப்படைச்சிட்டு வந்துடுறேன்..
வரும்போது கவனமா வாங்க. வெய்டிங் ஃபார் யூ ஜனா...
வில் சீ யூ சூன்... ஷாம்.. என்று கூறி துண்டித்தார்.
வெளியில் கிரிக்கெட் ஆடி விட்டு கை கால்களெல்லாம் அழுக்கோடு உள் நுழைந்த கிரண்... யார் கிட்ட அம்மா பேசிட்டு இருந்தீங்க...?
அப்பா கிட்ட.... இந்த நேரத்துலயும் இப்படி வெளியில போய் கட்டாயம் விளையாடனுமா கிரண்.. இதில் என்னம்மா இருக்கு. அம்மாவின் பின்புறம் கழுத்தை தனது இருகரங்களால் பிடித்து அணைத்தவாறு விடைபெற்றான்.
சிறு வயதிலிருந்தே கணிணியின் மேல் இருந்த ஆர்வத்தினால் தொழில்நுட்பமுறையில் கற்றுத் தேர்ந்தேன். என் கணவரின் உதவியால் ஒரு நிறுவனத்தையும் நிறுவினேன். லோகோ டிசைன், பேம்ப்லட் டிசைன், பேக்கேஜ் டிசைன், எடிட்டிங் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் 'ஜனா பார்டிகல்ஸ்' என்ற பெயரில் சேவை செய்து வருகிறேன். ஏனக்கு கீழ் ஏழு பேர் வேலைசெய்கின்றனர்.
கல்லூரியில் எனக்கு ஜூனியராக இருந்த வைஷ்ணவி எனக்கு வலது கையாக இருப்பவள். சொல்லிக்கிற அளவுக்கு சொந்தங்கள் இல்லை. அன்னை ஆசிரமத்தில் வளர்க்கப்பட்டவள். குடும்பத்தில் ஒருத்தியாகவே அன்றிலிருந்து இன்றுவரை...
வைஷ்.. வேலை எல்லாம் முடிஞ்சுதா.. அந்த ஐயங்கார் ஹோட்டலுக்கு புதுசா ஒரு டிசைன் பண்ண சொன்னேனே என்ன ஆச்சு..
இன்னைக்கு நைட் முடிஞ்சுரும் சீனியர். ஃபைனல் கரக்ஷனுக்காக நம்ம டீம் அதை செக் பண்ணிட்டு இருக்காங்க.
ஓகே.. டியர்.. கிரண் வைஷ்; இரண்டுபேரும் சாப்பிட வாங்க.. டிபன் ரெடி... சாப்பாடு பரிமாறிக்கொண்டே... கிரண் இந்த நேரத்துல ரொம்ப கட்டுப்பாடா இருக்கனும். கவனமா இரு.
இதையே எத்தனை தடவை சொல்லுவாங்க என்ற முனங்கலோடு கிரண் தலை குனிந்துகொண்டான்.
டோரை க்ளோஸ் பண்ணிக்கோ வைஷ்;.. காய்கறி வண்டி வந்துருக்கு போய் வாங்கிட்டு வாரேன். லிப்டில் பதினோராவது மாடியிலிருந்து கீழே இறங்கினாள். தள்ளுவண்டியில் காய்கறிகள் நிரம்பியபடி இருந்தன. என்னப்பா ரமேஷ்; யாருமே காய்கறி வாங்க வரலையா...
எங்க மேடம்.. ஒரு நாள் தளர்வு விட்டதும் விட்டாங்க அவ்ளோ பேரும் மார்க்கெட்ல ஈ மாதிரி மொய்ச்சிட்டு இருக்காங்க... சிறிது புன்முறுவலுடன்... நீங்களும் கவனமாக இருங்க ரமேஷ்;..
சரிங்கம்மா... எல்லாம் ஒரு கிலோ போட்டுட்டிங்கள்ள.. ஆமாங்கம்மா...
கையில் கிராஸரி பைகளுடன் மேலே ஏறியவுடன் கைகளை சானிடைசரால் நனைத்துக்கொண்டாள்.
படியில் பேப்பரை ஒரு கையிலும் தேநீர் கோப்பையை மறு கையிலும் பிடித்தவாறு வைஷ்;.... சிறிது இடைவெளியில் தெரிந்த ஷ்யாமை பார்த்து... ஏன் ஷ்யாம் இது உங்களுக்கே ஓவரா தெரியலையா..?
உம்ம்.. ஏன் சொல்லமாட்ட.. எல்லாமே வருகிறதுக்கு முன்னாடி பார்த்துகிறது என்னைக்குமே நல்லது..
இருவருமே பேசிக்கொண்டே சமையல் செய்துகொண்டிருந்தனர்.
ஏன் வைஷ். இரண்டு நாளாகவே டேஸ்ட்டும் ஸ்மெல்லும் சரியாவே தெரியமாட்டேங்குது... உனக்கு ஏதும் அப்படி இருக்கா..?
இல்லையே.. நார்மலாதான் இருக்கு. நீங்க எதையும் யோசிக்காம இருந்தாலே எதுவும் வராது... அதுவும் சரிதான்.
நேரமும் நாட்களும் நத்தை வேகத்தில் நகர்ந்தன.. அவசர வேலைக்கு வெளியில் செல்வதையும் தவிர்க்க முடியவில்லை. சிலசமயம் வயிற்றோட்டமும் வந்து போகுது.. சாப்பாடு எதும் சரியில்லையானு வேற தெரியல.. உடம்புக்கு ரொம்ப அசதியாவே இருக்கு.
வீட்டுக்குள்ளயே இருக்குற நமக்கே இப்படி இருக்கு.. இந்த நேரத்துல 24 மணி நேரமும் வேலை செய்ற முன் களப்பணியாளர்களுக்கு எவ்வளவு வேதனை இருக்கும்.
நம்ம வேணும்னா நம்ம ஒர்க்க கொஞ்சநாள் ஸ்டாப் பண்ணி வைக்கலாமா...
அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. எப்பயும் போல ரன் பண்ணலாம். எதுக்கும் நீங்க டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிக்கிறது நல்லதுனு நினைக்கிறேன்.

நானும் சுக்கு மிளகுன்னு கஷாயமெல்லாம் குடிச்சுப்பார்த்துட்டேன். கேட்குறமாதிரி தெரியல.. சரி எதுக்கும் ஒரு தடவை போய் பார்த்துட்டு வந்துறேன்.
நான் கூட வரவா அம்மா.. வேணாம்ப்பா.. பக்கத்துல தான நானே போய்க்கிறேன்... டூவீலரை எடுத்துக்கொண்டு டாக்டர். ரங்கராஜனை பார்க்க டோக்கன் போட நின்றுகொண்டிருந்தேன். பன்னிரெண்டாவது டோக்கன்...
இருப்பதிலேயே மிக நிதானமாக பொறுமையாக பேஷண்டுகளை கையாளுவார்.. உட்கார்ந்து உட்கார்ந்து குறுக்குவலியே வந்துவிடும் போலிருக்கு..
டோக்கன் நம்பர் பண்ணிரண்டு என்று கறுப்பு நிற டிஜிட்டல் மிஷனில் சிவப்பு நிற எழுத்தாக தெரிந்தது.
மே ஐ கம் இன் சார்..? எஸ் கம் இன்.... ஓ.. மிஸஸ். ஷ்யாமளா ஜனார்த்தனன்.... எப்படி இருக்கீங்க... ஜனாவும் கிரணும் எப்படி இருக்காங்க.. நல்லா இருக்காங்க டாக்டர்.. எனக்கு தான் உடம்புக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு.. டேஸ்ட் ஸ்மெல் எதுவுமே தெரியல..
ஸ்டெதஸ்கோப்பை எடுத்து காதில் ஒற்றிவிட்டு வலதுகையில் இருக்கும் கோப்பின் மறுமுனையை நெஞ்சில் அழுத்தி இதய துடிப்பை கேட்டறிந்தார். இரத்த அழுத்தத்தையும் சரிபார்த்தார். வலது கையின் ஆள்காட்டி விரலை காட்டச் சொல்லி மேசை மீது நீட்டவும் சிறியதாய் இருக்கும் ஆக்ஸிமீட்டரை திறந்து இரண்டு வாய்பகுதிகளுக்கும் இடையில் வைத்தார். தோராயமாக 96 இருந்தது....
காய்ச்சல் ஏதும் இருக்கா ஷ்யாம்ளா..?
இல்லை டாக்டர்.. பயப்படுற அளவுக்கு எதும் இல்லை..
இப்போ வருகிற எல்லா சிம்டம்ஸ}ம் கொரோனாவை ஒத்து போகிற மாதிரிதான் இருக்கும்.
சொல்லிவிட்டு.. மாத்திரை மருந்துகளை எழுதினார். எதுக்கும் ஒரு CT ஸ்கேன் மட்டும் எடுத்துருங்க. சும்மா ஒரு க்ளாரிஃபிகேஷனுக்காக தான்..
தாங்க்யூ டாக்டர்.. இட்ஸ் ஓகே மா...
CT ஸ்கேன் எடுக்கவா வேண்டாமா.. யோசனையாகவே இருந்தது. எடுத்துகிட்டா நிம்மதியா இருக்கும்னு ஒரு வழியா எடுத்துட்டேன். அசதியா இருந்தது. சமாளித்துக்கொண்டு வீட்டை நெருங்கிவிட்டேன்.
காலிங் பெல்லை அழுத்தவும் கதவைத் திறந்து டாக்டர் என்ன சொன்னாங்க ஷ்யாம் என்று பதறினாள் வைஷ்... பேசும்போதே மூச்சு வாங்கியது..
கையிலிருக்கும் மாத்திரைகளை வாங்கி கொண்டு.. சுட சுட வெண்ணீர் வைத்துக் கொடுத்தாள். பக்கத்து அறையில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு கிரண் விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் ஓய்வு எடுங்கள் படுக்கையை சரிசெய்து கொடுத்துவிட்டு.. வேலைகளை கவனிக்கச் சென்றாள் வைஷ்...
புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை... காலிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்டது. எழுந்து திறக்க தோனுகிறது. உடல் ஒத்துழைக்கவில்லை.
கிரண்.. கிரண்... சத்தம் காதில் விழவில்லை. மனதில் தெம்பை வரவழைத்துக்கொண்டு கதவருகே நடைபோட்டேன். யாராக இருக்கும்...? அதுவும் இந்த நேரத்தில்... சிந்தித்துக்கொண்டே கதவைத் திறந்தேன்.
வாட் அ பிளசண்ட் சர்ப்பிரைசஸ்... ஹனி.. என்று கூப்பிடும் போதே.. ஜனார்த்தனன், ஷ்யாமை கட்டி அணைத்து தழுவிக்கொண்டான்.
ஏன் ஒருமாதிரியா இருக்க ஷ்யாம்..? ஒன்னும் இல்லைங்க.. கொஞ்சம் உடம்புக்கு முடியல.. பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல.. CT ஸ்கேன் எடுத்தேன் ரிபோர்ட் மட்டும் வாங்கனும்.. சொல்லிக் கொண்டிருக்கும்போதே இருமினாள்.
ஒன்னும் இல்லை ஷ்யாம்.. சிஸ்டம்ல ஹெவியா வேலை பார்க்குற அதான்.. நல்லா ரெஸ்ட் எடு சரியாகிரும்.
அம்மா.. எனக் கூறிக் கொண்டே வந்த கிரண் அப்பாவை கண்டதும் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தான். அப்பா.... எப்போ வந்தீங்க..? கண்களில் ஆச்சரியமும் மனதில் ஆனந்தமும் கொண்டு துள்ளினான்.
இப்போதான் கிரண் என்று சொல்லி அணைத்து முத்தமிட்டார்.
கிட்சனிலிருந்து ஜூஸ் எடுத்துக்கொண்டு.. யு ஆர் வெல்கம் சார்.. என்று கையில் ஜூஸை கொடுத்தாள்.
மறுநாள் காலையில் வாக்கிங் சென்றிருந்த ஜனார்த்தனன் எதேச்சையாக டாக்டர். ரங்கராஜனை சந்தித்தார். ஹே.. மிஸ்டர் ஜனார்த்தனன் எப்போ ஊருக்கு வந்தீங்க..
நேத்து தான் சார்..
நைஸ் டூ மீட் யூ.. கை குலுக்கி கொண்டார். உங்க மனைவி எப்படி இருக்காங்க...
அப்படியே தான் சார் இருக்காங்க.. நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க.. சத்தான உணவு எடுத்துக்கோங்க.. பேசிக்கொண்டே வீட்டை நெருங்கவும் விடைபெற்றுக்கொண்டனர்.
ஙகாலை ஒன்பது மணி இருக்கும்.. ஒரு பக்கமாக சாய்ந்து படுத்திருந்த ஷ்யாமளாவின் பக்கத்தில் அமர்ந்து நெற்றியில் தொட்டுப் பார்த்தார். நெருப்பாக கொதித்தது..
ஷ்யாம்..ஷ்யாம்.. மெதுவாக கண்ணைத் திறந்து பார்த்தாள். மாத்திரை போட்டியா..? ஆமாங்க.. சரி நல்லா ரெஸ்ட் எடு.. மனக்கவலையுடன் அறையை விட்டு வெளியேறினார்..
நேரம் நகர்வதற்கு கூட பெர்மிஷன் கேட்டுக்கொள்வது போல இருந்தது. மதியம் இரண்டு மணி இருக்கும். மெல்ல நடந்து ஜனார்த்தனன் அருகில் அமர்ந்தாள். இப்போ பரவாயில்லையாம்மா... ஆமாங்க.. தோளில் சாய்ந்தவாறு அயர்ந்து தூங்கியவளை மெதுவாக சோபாவில் படுக்க வைத்தார்... காய்ச்சல் விட்டு விட்டு அடித்துக் கொண்டிருந்தது.
தூங்கி எழுந்ததும் மறுபடியுமாக டாக்டரிடம் சென்றனர்.. நான் எழுதும் மாத்திரைகளை நேரம் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமா முழுநேர ஓய்வு தேவை என்று கூறினார். கைக்கு அருகிலிருக்கும் பெல்லை அழுத்தி நர்ஸிடம் CT ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்துவரச் சொன்னார்.
ரிப்போர்ட்டை மேல்நோக்கி பார்த்துவிட்டு.. எல்லாம் நார்மலா தான் இருக்கு மிஸ்டர் ஜனார்த்தனன். இன்னும் இரண்டுநாளுக்கு மேல் இது தொடர்ந்தால் கண்டிப்பாக என்னை வந்துபாருங்கள்... காய்ச்சல் கொஞ்சம் அதிகமா இருக்குறதால எதுக்கும் ஒரு பிசிஆர் டெஸ்ட் ஒன்னு எடுத்துருங்க...

அது எதுக்கு டாக்டர்.. ஒருவேளை CT ஸ்கேன்ல சரியா தெரியாம இருக்கலாம். பிசிஆர் டெஸ்ட் எடுக்குறதுனால துல்லியமா என்னனு தெரிஞ்சுரும்.. சரி டாக்டர்...
டெஸ்ட் எடுக்குற இடத்தை நர்ஸிடம் கேட்டு தெரிந்துகொண்டு உள்ளே நுழைந்தனர். நாற்காலியில் அமர வைத்து ஒருவர் சீட்டுகளை சரிசெய்துவிட்டு.. மேல்நோக்கி பாருங்கம்மா என்றார். கையில் ஏதோ குச்சியில் பஞ்சை செருகியது போல் இருக்க எனது சுவாச அறையின் உள்ளே நுழைக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் மூளையை தொட்டுப் பார்ப்பதுபோல் இருந்தது. லேசான வலியை உணரமுடிந்தது. சாம்ஃப்ள்களை கொடுத்துவிட்டு விடைபெற்றேன்.
மனவேதனையோடு மெடிக்கலில் மருந்துகளை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
தலைவலி,வயிற்றுப்போக்கை அடுத்து தீவிர காய்ச்சல், பயங்கரமான உடல்வலி வேறு மனதில் உறுதியும் குறையத் தொடங்கிவிட்டது.
இரண்டு நாட்களாக சமாளித்து கொண்டு இருந்தேன். ஜனா அந்த ரிப்போர்ட்டை வாங்கி கொண்டு வரும்போது முகம் கவலையால் வாடிப்போய் இருந்தது. என் அருகில் அமர்ந்து தலையை தடவி கொடுத்தவாறு மௌன மொழிகளில் கண்களால் பேசினார்.
என்ன ஆயிருச்சு ஜனா.. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க... அதெல்லாம் ஒன்னும் இல்லைனு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்ததை உணரமுடிந்தது. எதுவும் சொல்லாமலே நகர்ந்து சென்றார்.
இரவெல்லாம் ஆந்தை போல விழித்தே இருந்தேன். தூக்கமில்லை. எதை எதையோ யோசிக்க தூண்டுகிறது. மனது ஒரு காரியத்தை யோசிக்கும்போதே நிலையாக இல்லாது நினைத்துக் கொண்டே இருக்கிறேன். நான் இவ்வளவு கட்டுப்பாடாக இருந்தும் இப்படி ஆகிவிட்டதே.. இனி எனக்கு எதுவுமே இல்லைனு உலகமே இருட்டான மாதிரி இருக்கு.
எதற்கும் அவர்கள் மூவரையும் பிசிஆர் டெஸ்ட் எடுக்க சொன்னால் என்ன..? வேணாம்.. நல்லா இருக்கும்போதே எதுக்காக எடுக்கனும்..? அப்படினாலும் ஜனா அதுக்கு ஒத்துழைப்பு தருவாரா..? தாறுமாறாக கேள்விகள் தூக்கத்தை விரட்டி அடித்தன.
காலையில் எழுந்ததும் ஜனா என் அறைக்கே உணவை எடுத்து வந்தார்.
ஜனா.. நான் ஒன்னு கேட்டால் கோபப்படமாட்டீங்களே... சொல்லு ஷ்யாம்.... நீங்க மூணு பேரும் பிசிஆர் டெஸ்ட் எடுத்துக்கனும்ங்க... உனக்கு என்ன பைத்தியமா...? சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் யாராது அந்த டெஸ்ட் பண்ணுவாங்களா...?
நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது.. எனக்கு பாசிடிவ் இருக்குறதுனால.. எதுக்கும் ப்ளீஸ்.. ஜனா.. எனக்காக..
ஒரு வழியா பேசி ஒத்துழைக்க வைச்சுட்டேன்... அரையும் குறையுமாக தலையை ஆட்டியவாறு நகர்ந்து
என்றார்.
தினமும் தனியாவே சமைக்கிறது.. எல்லா வேலையையும் ஒருத்தியாவே பார்த்து வைஷ் ரொம்பவே சோர்ந்து விட்டாள்.
மறுநாளிலிருந்து ஜனாவுக்கு கடுமையான காய்ச்சல். டெஸ்ட் ரிப்போர்ட்டை கூட வாங்க போக முடியவில்லை.
என்னதான் இருந்தாலும் கிராமப்புறங்களில் இருக்கும் கவனிப்பும் ஒற்றுமையும் இங்கு பார்த்திட முடியுமா..? காய்ச்சல் குறைந்ததும் போய் ரிப்போர்ட்டை வாங்கிவிட்டு வீடு திரும்பினார்.
கடுமையான உடல் உளைச்சல் வேறு.. ரிப்போர்ட்டை திறந்து பார்க்கவும் அதிர்ச்சி... கிரணுக்கு மட்டுமே நெகட்டிவ்.. ஜனா வைஷ்; இருவருக்கும் பாசிட்டிவ்....
என்னை அறியாமலே தாரை தாரையாக கண்களில் கண்ணீர் வழிந்தோடியது..
ஃபோனை எடுத்து டையலை அழுத்தினேன். மறுமுனையில் சுரேகா... சொல்லுங்க ஷ்யாமளா.. வெளியில ஆளையே காணோம்... அது ஒன்னும் இல்லை அக்கா.. காய்ச்சல் மாதிரி இருந்தது. அடுத்தடுத்து வீட்ல எல்லாருக்கும்... டெஸ்ட்ல கொரோனா பாசிட்டிவ்.. பக்கத்து வீட்ல இருக்கோம்... சொல்லாம இருக்க முடியாதேனுதான்... சரி அக்கா உடம்ப பாத்துக்கோங்க... சொல்வதற்குள் மறுமுனையில் கட் பண்ணினாள்....
நமக்கு இப்படி இருக்குனு சொல்றத கேட்குறதுக்குகூட அக்கம் பக்கத்துல ஆள் இல்லையே... கண்டிப்பா இவங்கள்ளாம் நம்மல ஒதுக்கி வைச்சுருவாங்க.. நமக்குனு இத்தனை வருஷத்துல யாரையுமே சம்பாதிக்காம இருந்தோமா.. நினைக்கும்போதே வேதனையா இருந்தது.
யாருக்கும் முடியல.. சாப்பாடு செய்ய முடியல.. ஆள் ஆளுக்கு ஒரு ரூம்ல இருந்தும் சரியாகல.. கிரணையும் சரியா பார்த்துக்க முடியல..
சஞ்சனாவிடம் பேசனும் போல் இருந்தது. இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. மனதில் பட்டதையெல்லாம் சொல்லி அழனும் போல் இருக்கு. எதிரே இருக்கும் மேசையிலிருந்து செல்போனை எடுத்து குறுஞ்செய்தியை அனுப்பினேன்.
டியர் சஞ்சனா, எனக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நாளுக்கு நாள் மூச்சுவிடவே சிரமமாக இருக்கிறது.
எனக்கு பிறகு உன்னால் மட்டுமே கிரணையும் வைஷ்ணவியையும் பார்த்துக் கொள்ளமுடியும். இரவு நேரங்களில் என்ன என்னவோ தோன்றுகிறது.
இப்போது இருக்கும் உடல்வலியைவிட மனவலி அதிகமாக இருக்கிறது. ஒருவேளை நான் இறந்துவிட்டால் என் சொத்தையெல்லாம் நீதான் பிரித்துக்கொடுக்கவேண்டும். உனக்கு மட்டுமே முழு உரிமையும்...
இன்று எனக்கிருக்கும் வலியை பகிர்ந்துகொள்ள நீ என் அருகில் இருந்திருக்கலாம் என்று மனம் ஏங்குகிறது.
கனத்த இதயத்துடன் என்றும் உன் உயிர்த்தோழமை... ஷ்யாம்..
அப்படியே லேசாக கண் அயர்ந்து தூங்கியே போனேன்... காலை 8 மணி இருக்கும்.... காலிங் பெல் அழுத்திய சத்தம்.. மெதுவாக சென்று திறந்து பார்த்தேன். யாரும் இல்லை. கீழே ஏதோ பார்சல்...
டியர் ஷ்யாம்ளா இது உங்களுக்காக பை சுரேகா என்று எழுதப்பட்ட பேப்பருடன் காலை உணவு.... மனம் லேசாக இருந்தது... நன்றி சொல்லியே ஆகனும்னு குறுஞ்செய்தியை அனுப்பினேன். மறுமுனையில் புன்னகைபூத்த ஸ்மைலியுடன்.. வி ஆர் கியர்.. ஃபார் யூ ஷ்யாம்.. Take Care.
மனதில் சிறு உறுத்தலும் கூட... அக்கம் பக்கத்தினர் ஒவ்வெருவராக உதவி செய்தனர். இவர்களா இது என்று கூட எண்ணம் வந்தது. கூடவே உதவிக்கரம் நீட்டும் இளைஞர் படையின் அன்பும்... என் நன்றிகளை உரித்தாக்க வார்த்தைகளே இல்லை.
இங்கு மற்றவர்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணமெல்லாம்.. நாம் அவர்களை எப்படி நினைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்தே வெளிப்படுகிறது. ஏன் குறுஞ்செய்தியைப் பார்த்த சஞ்சனா பதில் அனுப்பவே இல்லை..? குழப்பத்தோடும் எதிர்பார்ப்போடும் மனம் அங்கலாய்த்தது...
மொபைல் சைலண்ட் மோடில் மின்னியது.. எடுத்து பேசினேன். வீட்டிற்கு வெளியே வா... என் மனம் தேடிய சஞ்சனாவின் குரல்... வெளிய போய் பார்த்ததும் மட்டில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்த கூட தெம்பு இல்லை.
என்ன நினைத்து வந்திருந்தாளோ... மருத்துவமனை போகலாம் வா... என்று ஒரே பிடிவாதம். எவ்வளவோ தடுத்து பார்த்தும் முடியவில்லை. ஜனாவிடம் உரையாடிவிட்டு வெளியவே காத்திருந்தாள். உடை மாற்றிவிட்டு காரில் கிளம்பினோம்.
எனக்கு தெரிந்த நண்பர் ஷேக் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தற்காலிக மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரிடம் நான் எல்லாம் சொல்லிவிட்டேன். இந்த சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் பார்ப்பதுதான் நமக்கு நல்லது. பதில் ஏதும் கூறமுடியாமல் தலையை ஆட்டினேன்.
மருத்துவமனை பரபரப்பாகவே இருந்தது.. முதல் நாள் பரிசோதனை பண்ணிவிட்டு அப்சர்வேஷனில் வைத்தார்கள். மறுநாள் சஞ்சனாவிடம் கூறியதை லேசாக காதில் வாங்கிகொண்டேன்.
நல்ல சமயமாக இங்க கூட்டிட்டு வந்தீங்க சஞ்சனா.. நுரையீரல்ல வைரஸ்ஸின் தாக்கம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு.. ஒரு மாத காலம் இங்க அப்சர்வேஷன்ல இருந்தால் தான் எல்லாம் சரியாகும்.
ஒன்றரை மாத காலத்திற்கும் மேலாக அங்கு நான் கண்ட விஷயங்கள் நெஞ்சில் நீங்கா நினைவுகளாகப் புதைந்திருக்கின்றன. ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கு ஒரே மருத்துவம் தான்.
நான் உனக்கு இதைச் செய்கிறேன். நீ எனக்கு இதை திருப்பி செய்.. என்று கூறும் உறவுகளுக்கு மத்தியில்.... எதையுமே எதிர்பாராமல் மற்றவர் உடல்நலனுக்காக உழைக்கும் தேவதைகளை இங்கு பார்க்கிறேன்.
நீங்கள் கேட்கும் கேள்விகள் புரிகிறது... அப்போ அவர்கள் மாதவருமானம் வாங்கவில்லையா..? ஊக்கத்தொகை வாங்குவதில்லையா..?
இங்கு நம்மில் எத்தனையோ பேர் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த வேலையை நான் செய்யமாட்டேன் என்று கருதும் போது தன் உயிரையும் துச்சமென எண்ணி பிறர் உடல் நலம் காக்கும் மருத்துவர்களை என்ன என்று பாராட்டுவது..
வெறும் மருந்துகள் மட்டுமே உடலை சரிசெய்வதில்லை. அன்பும் கனிவும் பொறுமையும் அனைத்தையும் தாண்டி எதையும் நேர்மறை எண்ணங்களோடு எதிர்நோக்கும் மனநலம் இவையே நம்மை பலமாக்குகின்றன.
ஒரு பெரிய இன்னலிலிருந்து மீண்டு வெளியே வந்து நிதானமாய் யோசிக்கிறேன். எதையும் தைரியத்தோடு ஏற்றுக்கொண்டு போராடும் மன வலிமை வேண்டும். இன்றளவும் அவர்கள் மீதான நன்றியுணர்வு என்னிடமிருந்து விலகவில்லை....
அழியும் இவ்வுலகில் அழியாத நேசங்களை விதைத்துச்செல்வோம் நன்றியுணர்வோடு.....
ஹ. தங்கரதி
எம்.எஸ்.சி., உளவியல், முதலாம் ஆண்டு மாணவி
அழகப்பா பல்கலைக்கழகம்












Click it and Unblock the Notifications