எது புயலா? சீரியஸாகும் வானிலை.. தமிழ்நாட்டின் 5 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்கள் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் மாத இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் தமிழ்நாட்டில் சற்று குறைந்த நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று வங்கக்கடலில் உருவானது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது இது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டு உள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை எண்ணூ, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.

48 மணி நேரம்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காரைக்காலில் இருந்து சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு - தென்கிழக்கு திசையிலும், சென்னையில் இருந்து சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு - தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் இது நகர்ந்து சென்று தமிழகம் - புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்." என்று கணித்து உள்ளது.

இந்திய வானிலை மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "வட தமிழக மாவட்டங்களில் இன்று மாலைக்கு பிறகு மழை தொடங்கும். இன்று வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் பிறகு படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். வரும் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், வரும் 20 முதல் 22 ஆம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications