தெரு நாய்களை பாதுகாப்பது அரசின் கடமை.. அதற்குதானே ஓட்டு போட்டோம்.. கொந்தளித்த நிவேதா பெத்துராஜ்!
சென்னை: தெரு நாய்களை பாதுகாப்பது அரசின் கடமை என்றும், அதற்காகவே ஓட்டு போட்டுள்ளோம் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். அதேபோல் நாய் கடி பிரச்சனைகள் அதிகரிக்கும் நிலையில், தெருநாய்களை அடைத்து வைப்பதை விட, தடுப்பூசி போடுவது தான் தீர்வு என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ரேபிஸ் நோயால் 28 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டில் 4.8 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 48ஆக இருந்தது. கடந்த ஆண்டை விடவும் நடப்பாண்டில் அதிகளவில் பொதுமக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

இதனால் தெருநாய்களுக்கு எதிரான பொதுமக்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் தனியார் அமைப்பு சார்பாக தெரு நாய்களை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்து கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து நிவேதா பெத்துராஜ் பேசுகையில், தெருநாய்களை அடைத்து வைக்க வேண்டும் என்று சொல்லும் போது, அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மிகவும் எளிது. தடுப்பூசி செலுத்திவிட்டு, அதனை அதே இடத்தில் விட்டுவிட்டாலே போதுமானது.
சில தெரு நாய்கள் கடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. காரில் தெரியும் எங்களுக்கு தெரியுமா என்று கேட்காதீர்கள். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.. அதற்காகதான் நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். சின்ன வயதில் இருந்தே பள்ளி மாணவர்களுக்கு தெரு நாய்களை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இன்று தெரு நாய்கள் என்று பேசுபவர்கள், நாளை குரங்குகளை அகற்ற வேண்டும் என்பார்கள். தெரு நாய்கள் கடிப்பதை பெரிதாக்குகிறார்கள். ரேபிஸ் கொடுமையான நோய் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அது நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் ஒருவர் குற்றம் செய்துவிட்டால், உடனடியாக அவரை கொலை செய்ய வேண்டும் என்று பேசுவதில்லை தானே.. அது நாய்களுக்கும் பொருந்தும்.
நானும் 6 மாதங்களுக்கு முன் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தமிழ்நாட்டில் 4.5 லட்சம் தெரு நாய்கள் இருக்கிறது. அதனை அடைக்க பெரிய செலவு செய்ய வேண்டியது இருக்கும்.. அதற்கு பதிலாக தடுப்பூசி செலுத்த வேண்டும். அதனால் தெரு நாய்களை பாதுகாப்பு அரசின் கடமையாகும். அதற்காக தானே ஓட்டு போட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications