ஸ்டாலினையே அவமதிச்சிட்டாங்க.. கன்னட அமைப்பினரை அடிச்சி நொறுக்கணும்! கொதித்த ஜாகுவார் தங்கம்
சென்னை: கர்நாடகாவில் காவிரி போராட்டத்தின்போது முதல்வர் ஸ்டாலினையும், நடிகர் சித்தார்த்தையும் கன்னட அமைப்பினர் அவமதித்த நிலையில் திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனர் ஜாகுவார் தங்கம் கொதித்துள்ளதோடு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. மண்டியா, பெங்களூரில் பந்த் நடத்தப்பட்டது. அதன்பிறகு கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் முகம்சுளிக்கும் செயல்களில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டனர். அதேபோல் நடிகர் சித்தார்த்தும் பெங்களூரில் கன்னட அமைப்பை சேர்ந்தவர்களால் விரட்டப்பட்டார்.
அதாவது நடிகர் சித்தார்த் தான் நடித்த ‛சித்தா' திரைப்படம் குறித்த பெங்களூர் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் நடிகர் சித்தார்த் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் புகுந்து காவிரி விவகாரம் பற்றி பேசி பாதியில் வெளியேற்றினர். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் இருமாநிலங்கள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நடந்து வரும் போராட்டம் குறித்து, சித்தா திரைப்படம் தொடர்பாக பெங்களூரில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் கன்னட அமைப்பை சேர்ந்தவர்களால் வெளியேற்றப்பட்டது பற்றியும் திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனர் ஜாக்குவார் தங்கம் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
‛‛சின்ன குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்றாலும் வீடு தேடி சென்று உதவி செய்கிறார் தமிழக முதல்வர். ஆனால் அவரை கன்னட வெறியன் அவமதித்துள்ளான். நான் தமிழ் பற்று உள்ளவன். ஆனால் தமிழ் வெறியன் கிடையாது. தமிழக முதல்வரை அவமதித்தவர்கள் அவரது பக்கத்தில் கூட நிற்க முடியாது. அவரது கால் செருப்புக்கு கூட சமமில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
காவிரி போராட்டத்தின்போது தமிழக முதல்வரை அவமதித்தவர்களை கர்நாடகாவில் கைது செய்யவில்லை. அவர்கள் சுதந்திரமாக உலவி வருகின்றனர். இது தமிழ் பற்றுள்ள எங்களுக்கு கடுப்பாக உள்ளது. உண்மையிலேயே முதல்வரை அவமதித்தவர்களை அடிக்கனும், அடிச்சி நொறுக்கணும் போல் இருக்கு. ஆனால் நம் தமிழக முதல்வர் அதுபோல் நம்மை அனுமதிக்காமல் உள்ளார். ஏனென்றால் தமிழ்நாட்டில் மறியல் செய்தாலே கைது செய்கிறார்கள். ஆனால் அங்கு (கர்நாடகா) கூட்டணி கட்சி (இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக உள்ளது)என கூறிக்கொண்டு கைது நடவடிக்கை எதுவும் செய்யவில்லை.

சித்தார்த் ஒரு நல்ல நடிகர். அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர். நல்ல மனிதர். நல்ல பண்பாளர். அவர் மேடையில் இருக்கும்போது வேட்டிக்கட்டிய சிலர் தடுத்து நிறுத்துகின்றனர். அவர்கள் எல்லாம் ஏன்? வேஷ்டி கட்டுகிறார்கள். சித்தார்த்தின் முகபாவணையை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருந்தது. அதனை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை நடிகர் சங்கம் கண்டிக்க வேண்டும்.
இதனை எல்லாம் கண்டித்து திமுகவினர் உள்பட அனைவரும் போராட்டம் செய்ய வேண்டும். இதனை தமிழக முதல்வர் சொல்லமாட்டார். அது அவரது பெருந்தன்மை. ஆனாலும் 8 கோடி மக்களுக்கான முதல்வரை அவமதித்தால் அவனை சும்மா விட்டு செல்ல முடியாது'' என்றார்.












Click it and Unblock the Notifications