Pongal Unesco: யுனெஸ்கோ அங்கீகரித்த விழாக்களில் பொங்கல் பண்டிகை இல்லை! சுப வீரபாண்டியன் ஆதங்கம்
சென்னை: இந்தியாவின் விழாக்கள் என்ற பட்டியலில் யுனெஸ்கோ பொங்கல் பண்டிகையை சேர்க்கவில்லை. எனவே பொங்கல் பண்டிகை யுனெஸ்கோவின் அங்கீகரிக்கப்பட்ட விழாக்களில் இடம்பெற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சுப வீரபாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்து குழுமம், தமிழக சுற்றுலா துறை இணைந்து தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் பண்டைய சடங்குகள் (Fairs and Festivals: Traditional and Ancient Customs) என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இந்த விழாவில் சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன், காங்கிரஸ் தலைவர் கோபண்ணா, எழுத்தாளர் சங்கத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்த விழாவில் பேசிய சுப வீரபாண்டியன், "இந்த புத்தகத்தில் 27 விழாக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதில் முதலில் இடம் பெற்றிருப்பது நம் தமிழர் திருநாளான பொங்கல் விழா என்பதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு.
பொங்கல் விழாவை ஒரு விழாவாக ஏற்றுக் கொண்டதில் என்ன மகிழ்ச்சி என்று கேட்டால், என்ன செய்வது? 2009ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள பல்வேறு விழாக்களை யுனெஸ்கோ பட்டியலிட்டுக் கொண்டே வருகிறது.
அதில் நவராத்திரி, துர்கா பூஜை, குஜராத்தில் மட்டும் கொண்டாடப்படும் குர்பா நடனம், கும்பமேளா, தீபாவளி ஆகியவற்றை இந்தியாவின் விழாக்கள் என யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது. ஆனால் இன்று வரை பொங்கல் பண்டிகை யுனெஸ்கோவின் அங்கீகரிக்கப்பட்ட விழாக்களில் இடம்பெறவில்லை.
பொங்கலுக்கும் நம் உணர்வுகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அண்ணா 1942 ஆம் ஆண்டு திராவிட நாடு என்ற இதழை தொடங்கினாலும் 1956 ஆம் ஆண்டு முதல் பொங்கலை பற்றி ஒவ்வொரு ஆண்டும் தம்பிக்கு என அண்ணா எழுதி வந்தார். 1956 ஆம் ஆண்டு வந்த கடிதம்தான் முதல் கடிதம். அதற்கு விழாக் கோலம் என பெயர்.
கடிதத்தை தொடங்கும் போது அண்ணா தனக்கே உரிய நடையில் தொடங்குவார். "மறையெல்லாம் மாக்கோலம், மனைவுடார் நாமெல்லாம் மகிழ்ச்சி கோலம், தெருவெல்லாம் பூக்கோலம், நாடெங்கும் விழாக் கோலம் " என்று அவர் தொடங்குவார். எல்லோரும் பொங்கலை கொண்டாடுங்கள் என உரக்க சொல்லுவார்.
கடைசியாக 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , அண்ணா எழுதிய பொங்கல் விழா கடிதத்தில் எழுதிய தொடரும் , இன்றைக்கும் நம் நெஞ்சினிலே தங்கியிருக்கிற ஒன்று! பொங்கலைத்தான் மகிழ்ச்சியாக கொண்டாடுவேன். ஆனால் பொங்கல் விழாவுக்கு புறப்படக் கூட நேரமில்லை என்பார். இதற்கு காரணம் சூழ்நிலையின் கைதி என்பார். முதல்வராகிவிட்டால் அவரவர் விருப்பத்திற்கு நடந்து கொள்ள முடியாது என்பதை அப்படி கூறுவார். இவ்வாறு பொங்கல் பண்டிகை குறித்து சுப.வீரபாண்டியன் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications