மோடியின் கனவு நனவாகுது.. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தமிழகம் சக்ஸஸ்.. 1 கோடி வீடு? சபாஷ் மத்திய அரசு
சென்னை: தமிழகத்தில் மட்டும், 1.25 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மத்திய அரசு, கடந்த 2019 முதல், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தண்ணீருக்கான தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த திட்டம்.. இந்த திட்டத்தின்கீழ், 2024ம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள், கிராமப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும், தனி குடிநீர் இணைப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்தல் மற்றும் மறுபயன்பாடு போன்ற விஷயங்களை ஆய்வு செய்து குடிநீர் நிலைத்தன்மை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வடமாநிலங்கள்: ஜீவன் திட்டம் நாடு முழுக்க செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும், வடமாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.. காரணம், அங்குதான் குறைவான தண்ணீர் பயன்பாடு, குடிநீர் வசதி உள்ளது. சமீபத்தில், இந்த திட்டம் தொடர்பான முக்கிய புள்ளி விவரம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
அதில், 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 100 சதவீத கவரேஜையும், 10 மாநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான கவரேஜையும், 11 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கவரேஜையும், 4 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான அளவிலும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட்: மொத்தத்தில், 2019 ஆகஸ்ட்டில் 16.82% கிராமப்புற குடும்பங்கள் குழாய் நீர் இணைப்புகளை கொண்டுள்ளதாகவும், 2023 நவம்பரில் இந்த எண்ணிக்கை 70% ஆக உயர்ந்ததாகவும் தெரிவித்திருந்த மத்திய அரசு, ஜல் ஜீவன் மிஷன் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டி உள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு, இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
இணைப்புகள்: தமிழகத்தில் மட்டும், 1.25 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.. இதில், குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்ட பகுதிகளில், குடிநீர் வினியோகமும் செய்து சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.. இதை பாராட்டி, கடந்த 2022ல் தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியும் கவுரவித்திருந்தது.
இப்போது வரை இத்திட்டத்தின் கீழ், ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்ட இலக்கை அடைவதற்கு இன்னும் அவகாசம் உள்ள நிலையில், இந்த வருட இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க, தமிழக குடிநீர் வடிகால் வாரியம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது..
உத்தரவு: வடகிழக்கு பருவ மழையால், பல இடங்களில் ஜல்ஜீவன் மிஷன் திட்ட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டபோதிலும்கூட, மற்ற மாநிலங்களை மிஞ்சும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தமிழகத்தில் வேகமாக நடந்துவருகிறதாம்.. பருவ மழை ஓய்ந்த நிலையில், பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications