கரும்பு விவசாயிகளுக்கு ரூ.603.34 கோடி ஊக்கத்தொகை.. பணம் எப்போது வரும்? தமிழக அரசின் தீபாவளி பரிசு
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 கிடைக்கப்போகிறது.. இதற்காக தமிழக அரசு ரூ.603.34 கோடியை ஒதுக்கியுள்ளது.. ஆனால் இந்த ரூ.4,000 எப்படி கிடைக்கும்? யாருடைய வங்கிக்கணக்கில் பணம் வரும்? அதிலும் தீபாவளி முதல் பணம் வரப்போகிறது என்றால்.. விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது... இந்த கோரிக்கையை படிப்படியாக நிறைவேற்றும் வகையில், கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கில் முதலமைச்சர் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

வங்கிக்கணக்கில் பணம்
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில்தான் இப்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. அதன்படி, 2025-26 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.709.50 வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநில நிதியில் இருந்து ரூ.603.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு முக்கிய விஷயமும் உள்ளது.. கடந்த 5 வருஷத்தில் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை மொத்தமாக ரூ.156 மட்டுமே உயர்த்தப்பட்டிருந்தது.. ஆனால் இப்போது ஒரே வருஷத்தில் ரூ.360.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஒரே வருடத்தில் ரூ.134-க்கும் அதிகமாக ஊக்கத்தொகையை உயர்த்துவது இதுவே முதல் முறை என்றும் முதலமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 டன் 4000 ரூபாயா?
2025-26 சர்க்கரைப் பருவத்தில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலை, 9.5 சதவீத சர்க்கரைக் கட்டுமானத்துக்கான அடிப்படையில் டன் ஒன்றுக்கு ரூ.3,290.50. இதனுடன் தமிழக அரசின் ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகையை சேர்த்தால் டன் ஒன்றுக்கு ரூ.4,000 கிடைக்கும்.
சர்க்கரைக் கட்டுமானம் 9.5 சதவீதத்துக்கு மேல் இருந்தால், அதற்கேற்ப ரூ.4,000-க்கும் அதிகமாக விலையும் கிடைக்கும். 2025-26 சர்க்கரைப் பருவம் அக்டோபர் 1, 2025 முதல் தொடங்கியது.
கரும்பு விவசாயிகள்
தமிழகத்தில் இந்த பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 15 தனியார் என மொத்தம் 29 சர்க்கரை ஆலைகள் அரவைப் பணியை மேற்கொண்டுள்ளன. இந்த நடவடிக்கையால் கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன், சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகளும் மேம்படும். சர்க்கரை மற்றும் அதன் உப பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
கரும்பு வழங்கிய விவசாயிகளின் கரும்பு எடை, ஆதார் எண், வங்கிக்கணக்கு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கலெக்டர்கள் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் இந்த விவரங்கள் ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு சர்க்கரைத்துறை இயக்குநரகம் கூர்ந்தாய்வு செய்து பரிந்துரை செய்த பிறகு தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
வங்கிக்கணக்கில் ஸ்ட்ரைட்டா..
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட உள்ளது.. இதற்கான பணிகளும் இப்போது நடந்து வருகின்றன., விரைவில் தீபாவளி வரப்போகிறது.. அதனால் பண்டிகை முதல் இந்த சிறப்பு ஊக்கத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதன் மூலம் சுமார் 90,000 கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். கரும்புக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதுடன், கரும்பு சாகுபடியும் தொடர்ந்து அதிகரிக்கும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது....!!


Click it and Unblock the Notifications
