தவெக ஆட்சி குறித்து நான் விமர்சித்தேனா? போனால் போகட்டும் போடானு விடாமல் பதறிய நாஞ்சில் சம்பத்
சென்னை: தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். தவெக ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருவது என் தலைமை அறியும் என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாவது: உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி விஜய்.

இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் விஜய்யின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை.
இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..! இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தவெகவில் பரப்புரை செயலாளர் பொறுப்பை வகித்து வருகிறார் நாஞ்சில் சம்பத். திமுகவில் பயணித்த நாஞ்சில், மதிமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் பணியாற்றியுள்ளார். அதிமுகவில் இணைந்த போது பிரச்சாரங்களுக்காக அவருக்கு ஜெயலலிதா இன்னோவா காரை பரிசாக அளித்திருந்தார். அவரது மரணத்திற்கு பிறகு நாஞ்சில் ஓரம்கட்டப்பட்டார். இதையடுத்து தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். அவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து திமுக ஆதரவாளராக இருந்தார். ஆனால் திமுக தலைமை அவருக்கு எந்த பொறுப்பையும் கொடுக்கவில்லை.
திமுக நிர்வாகி
மேலும் திமுக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தவெகவில் விஜய் முன்னிலையில் இணைந்தார். அப்போது கூட திமுகவை கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்திருந்தார். இவர் டிவி விவாதங்களில் கலந்து கொண்டு தவெக ஆதரவு கருத்துகளை தெரிவித்து வந்தார்.
நாஞ்சில் சம்பத்
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென நாஞ்சில் சம்பத் போட்ட பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் தனது பக்கத்தில் "போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது" என்று பதிவிட்டிருந்தார்.
இடைத்தேர்தல் பிரச்சாரம்
தவெக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதால் இப்படி நாஞ்சில் சம்பத் பதிவிட்டிருக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலுக்கு நாஞ்சில் சம்பத்திற்கு தவெக சார்பில் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. அது போல் இடைத்தேர்தலுக்காக பணியாற்ற கூடிய பொறுப்பாளர்கள் பட்டியலிலும் நாஞ்சில் சம்பத் பெயர் இடம் பெறவில்லை.
தவெக மீது அதிருப்தி
இதனால் நாஞ்சில் சம்பத் தவெக மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் தவெக ஆட்சியில் சில குறைகள் அருப்பதாக நாஞ்சில் பேசியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குறைகளை சரி செய்வோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
நாஞ்சில் சம்பத் மீது விஜய்க்கு அதிருப்தி?
இவரது இந்த பேச்சுகளால் விஜய், நாஞ்சில் சம்பத் மீது அதிருப்தி அடைந்தாரா என்பது தெரியவில்லை. இதனால் தவெகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகுகிறார் என பலரும் யூகமாக செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய்யை தென்றல், உப்பு என உவமைகள் மூலம் பாராட்டியுள்ளார்.




Click it and Unblock the Notifications
