பள்ளி மாணவர்களுக்கு "போனஸ்" 5 மார்க் அறிவிப்பு.. யாருக்குன்னு பாருங்க.. தேர்வுத்துறையின் மாஸ் அதிரடி
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4,167 மையங்களில் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர்.

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் அதாவது ஏப்ரல் 24 முதல் மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில், ஒரு மதிப்பெண் பிரிவில் 4, 5, 6 ஆகிய கேள்விகள் குழப்பமாக இருந்ததால், அக்கேள்விகளுக்கு மாணவர்களால் முறையாக பதிலளிக்க முடியவில்லை என புகார் எழுந்தது. இதேபோன்று, 28வது கேள்வியும் தவறாக கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதனை அடுத்து, ஒரு மதிப்பெண் பிரிவில் 4, 5, 6 ஆகிய கேள்விகளுக்கும், இரு மதிப்பெண் பிரிவில் 28வது கேள்விக்கும் முழுமையாக மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
வினாத்தாளை ஆய்வு செய்ததில், பிழை நேர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு 3 மதிப்பெண்ணும், 28வது கேள்விக்கு இரண்டு மதிப்பெண்ணும் என, 5 மதிப்பெண்கள் வழங்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த கேள்விகளுக்கு மாணவர்கள் எந்த விடையை எழுதியிருந்தாலும், 5 மதிப்பெண்கள் முழுமையாக வழங்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. அதில், 'ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும். அதன்படி தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.மேலும் ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28-க்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும்" என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications