பொங்கல் பரிசு ரூ.3000 வாங்காத பயனாளிகளுக்கு மீண்டும் சூப்பர் வாய்ப்பு.. தமிழக அரசு இன்று குட்நியூஸ்
சென்னை: தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை மேலும் ஒரு நாள் நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை பொங்கல் பரிசு பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் இன்றைய தினம் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் சென்று பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த வருடமும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது.

இதில் ரூ.3,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. பொங்கல் விழாவை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட மக்கள் பயன்பெறும் வகையில் இந்த உதவி வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு
ஜனவரி மாத தொடக்கத்தில் டோக்கன் முறையில் விநியோகம் தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 04.01.2026 முதல் 07.01.2026 வரை தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் வழங்கப்பட்டது.
இதில், முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், 2ம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாய விலைக்கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இன்றும் பரிசு பொருட்களை பெறலாம்
இருந்தாலும் பல்வேறு காரணங்களால் சிலர் குறிப்பிட்ட நாட்களில் பரிசை பெற முடியாமல் போனதாக கூறப்படுகிறது. வேலை காரணமாக வெளியூர் சென்றவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக வர இயலாதவர்கள் உள்ளிட்டோர் இன்னும் பரிசை பெறவில்லை என்ற தகவல்கள் அரசின் கவனத்திற்கு வந்தன.
இதையடுத்து, பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பொங்கல் பரிசு விநியோகத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், இதுவரை பரிசு பெறாதவர்கள் இன்று அதாவது ஜனவரி 14ம் தேதி தங்களது ரேஷன் அட்டையுடன் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.
அவகாசம் நீட்டிப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற 13-ம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய தினமும் வழங்கப்படும் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, கடைசி நேரத்தில் பரிசை பெற முடியாமல் தவித்த குடும்பங்களுக்கு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
நேற்றைய தினம் வரை 2 கோடியே 4 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.3,000 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினமும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications