காணாமல் போன குழந்தைகளை தேட வெப்சைட் தேவை! மத்திய அரசுக்கு உத்தரவு.. அசத்துதே சுப்ரீம் கோர்ட்
சென்னை: இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போய் கொண்டிருக்கின்றனர்.. குழந்தைகளை கடத்தல்களுக்கு நடுவில், குழந்தைகள் மாயமாவது பேரதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழ்நிலையில், காணாமல் போன குழந்தைகளை கண்டறிய முக்கிய பரிந்துரையை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் முன்வைத்துள்ளது. மத்திய அரசு இதனை நடைமுறைப்படுத்தினால், மாயமாகும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாகு குறைக்கப்பட்டு விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மதுரை, திருப்பூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளங்குழந்தைகள் கடத்தப்பட்டு, பிறகு போலீஸார் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மாயமாகும் குழந்தைகள்
தமிழகத்தின் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனைகள், பலவீனமான ஆரம்ப சுகாதார நிலையங்களை டார்கெட் செய்து குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. . பணத்தேவையிலுள்ள சாதாரண ஏழ்மை நிலையில் உள்ள பெண்களைக் கடத்தல் கும்பல் ஆசை வார்த்தைக் காட்டி குழந்தையைக் கைமாற்றம் அல்லது திருடி வரச் செய்கின்றனர். எனவே, இந்த குழந்தை திருட்டை தடுக்க தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.
மற்றொருபக்கம் குழந்தைகள் காணாமல் போவதும் தேசிய அளவில் அதிகமாகவே நடந்து வருகிறது.. இதற்காகவே, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய தகவல் தொடர்பு துறை, ரயில்வே துறையுடன் இணைந்து, "கோயா பயா" என்ற திட்டத்தை ஏற்கனவே துவக்கியது.
ரயில்வே இணையதளம்
அதன்படி, நாடு முழுவதும் காணாமல்போகும் மற்றும் மீட்கப்படும் குழந்தைகள் விபரங்களை indianrailways.gov.in மற்றும், khoya---paya.gov.in/mpp/home என்ற வெப்சைட் முகவரியில் பதிவு செய்ய, ரயில்வே பாதுகாப்பு படைக்கு உத்தரவும் பிறக்கப்பட்டு, அது தற்போது நடைமுறையிலும் உள்ளது.
இந்த வெப்சைட்டில் பதிவு செய்யப்படும் காணாமல் போன குழந்தைகளின் விவரங்கள் உடனடியாக நாடு முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன், குழந்தைகள் நல இணைய தளங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.. இதன் மூலம், குழந்தைகளை தேடும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு, விபரங்கள் பயன் தருவதாக அமைந்து வருவதை மறுக்க முடியாது.
மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இப்படிப்பட்ட சூழலில், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் புதிய இணையதளத்தை உருவாக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர், குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார்.. இவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகள் நலன் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
வெப்சைட்டை உருவாக்க வேண்டும்
அப்போது, "இந்தியா முழுதும் குழந்தைகள் கடத்தப்படுவது பெருகி வருகிறது.. கடத்தப்படும் குழந்தைகள், ஒரு மாநிலத்தில் இருந்து இனனொரு மாநிலத்திற்கு உடனடியாக கைமாற்றப்படுகிறார்கள்.. எனவே இதனை தடுக்க பொதுவான இணையதளத்தை இதற்கெனவே உருவாக்க வேண்டும். குழந்தை கடத்தலில் ஈடுபடுவோர் குறித்த விபரங்கள் அதில் முழுமையாக இடம் பதிவு செய்யப்பட வேண்டும். இதில், சிபிஐ தேசிய புலனாய்வு அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட வேண்டும்" என்று வாதம் செய்தனர்.
காணாமல் போன குழந்தைகள்
இதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில், "இந்த பிரச்சனைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.. இந்த பிரச்சனையில் தீர்வு காணக்கூடிய வகையில் அனைத்து மாநிலங்களையும் இணைத்து ஏன் ஒரு குழுவை மத்திய அரசு அமைக்கக் கூடாது?
மாயமான குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் போதுமான ஒத்துழைப்பு இல்லை. அந்த புகார்களுக்கு தொடர்புடைய அதிகாரிகளிடமும் போதிய ஒருங்கிணைப்பு தேவை.
காணாமல் போன குழந்தைகள் குறித்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட உடனேயே அந்த தகவல்கள் இந்த தேசிய இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். இது ஒரு மத்திய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பாகச் செயல்பட வேண்டும்..
தனி வெப்சைட் தேவை
கடத்தல் குற்றங்கள் குறித்த நிகழ்நேர தகவல்களை பகிர்வதற்காக, 2020ம் ஆண்டில் க்ரைம் மல்டி ஏஜென்சி சென்டர் (Cri-MAC) என்ற தேசிய அளவிலான தொடர்பு தளமும் தொடங்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது. இந்த யோசனைகள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை அடுத்த விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே மாயமான குழந்தைகள் தொடர்பான வழக்குகளை தீர்க்க, மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் மத்திய அரசு இணையதளத்தை உருவாக்க வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்களை மத்திய அரசிடமிருந்து பெற்று கோர்ட்டில் தாக்கல் செய்ய, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்திக்கு உத்தரவிடுகிறோம்" என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications